சுகாதார ஊடகவியலுக்கான மும்மொழிகளிலும் அதிசிறந்த விருதுகளை வென்றெடுத்த லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்கள்

சுகாதார ஊடகவியலுக்கான மும்மொழிகளிலும் அதிசிறந்த விருதுகளை வென்றெடுத்த லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்கள்-Excellence in Health Journalism Award for Lake House Journalists in All Three Languages

இலங்கை மருத்துவ சங்கம்  வருடாந்தம் நடத்தும்  வருடத்திற்கான அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருது வைபவம், கொழும்பு-07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த 27 ஆம் திகதி (நவம்பர் 2021) நடைபெற்றது.

இலங்கை மக்கள் மத்தியில் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் வைபவம் இடம்பெற்றது.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஊடாக மக்கள் மத்தியில் சுகாதார அறிவை மேம்படுத்தப் பங்களிக்கும் ஊடகவியலாளர்களில் மூன்று ஊடகவியலாளர்கள் வருடாந்தம் மூன்று மொழிகளுக்காவும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இம்முறை இவ்விருதுக்காக தெரிவு செய்யப்படடுள்ள மூன்று ஊடகவியலாளர்களும் லேக் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாவர். லேக் ஹவுஸ் வரலாற்றில் மூன்று மொழிகளுக்கும் உரிய அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருதுகளை இந்நிறுவன ஊடகவியலாளர்கள் வென்றெடுத்திருப்பது இதுவே முதற்தடவையாகும். அதேநேரம் இந்நாட்டின் ஊடகத்துறையில் ஒரே நிறுவனம் மூன்று மொழிகளுக்குமான விருதுகளைப் பெற்றிருப்பதுவும் இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை மருத்துவ சங்கமானது, இலங்கையிலுள்ள முன்னணி தொழில் வாண்மை மருத்துவ சங்கமாகும். இது ஆசிய அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில் வாண்மை மருத்துவ சங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், விஷேட மருத்துவ நிபுணர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் வாண்மை மருத்துவர்களை உள்ளடக்கியுள்ள இச்சங்கத்தின் தற்போதைய தலைவர் முன்னணி நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் பத்மா குணரட்ன ஆவார். இச்சங்கத்தின் ஊடக குழுத் தலைவராக டொக்டர் ருவைஸ் ஹனிபா கடமையாற்றுகின்றார்.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கும் அமைப்பின் விருதுகளை வென்று லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்த மூன்று ஊடகவியலாளர்கள் தொடர்பிலான சுருக்கப் பதிவு இது.

மர்லின் மரிக்கார்

இம்முறை தமிழ் மொழிக்கான அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருதை தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் இணையாசிரியர் மர்லின் மரிக்கார் வென்றெடுத்துள்ளார். இவ்விருதை இவர் ஏற்கனவே இரண்டு தடவைகள் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'இலங்கை மருத்துவ சங்கத்தின் சுகாதார ஊடகவியலுக்கான திறமைக்கான விருதை 2002 இல் முதலில் வென்றெடுத்ததோடு 2004, 2005 வருடங்களில் அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருதை வெற்றி பெற்றேன். அதன் பின்னர் தற்போது வென்றிடுத்திருப்பது 2019/2020 ஆண்டுகளுக்குரிய விருதாகும்' என்றார் மர்லின் மரிக்கார்.

சுகாதாரம் தொடர்பான கட்டுரைகள் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பங்களிக்கக் கிடைத்துள்ளமையை இட்டு பெரிதும் திருப்தியடைவதாகக் குறிப்பிட்ட இவர், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு 2014 இல் சிங்கள மொழியில் வெளியிட்ட, 'சுகாதார துறையினருக்கான டெங்கு ஒழிப்பு வழிகாட்டல் நூலை மொழிபெயர்த்ததையும் நினைகூர்ந்தார்.

கொலன்னாவ பிரதேசத்திற்கான பிரதேச ஊடகவியலாளராக ஊடகவியல் துறையில் பிரவேசித்த மர்லின் மரிக்கார், 1995 முதல் தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முழு நேர ஊடகவியரானார். 26 வருடங்களாக முழு நேர ஊடகவியலாளராக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவர், 2001, 2002 ஆகிய வருடங்களில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் விஞ்ஞானத்தைப் பிரபல்யப்படுத்தும் ஊடகவியலுக்கான விருதுகளையும், சுகாதார கல்விப் பணியகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் இணைந்து நடாத்திய 'இனவிருத்தி ஆரோக்கியம் தொடர்பான ஊடகவியலுக்கான திறமைக்குரிய விருதை' 2003 மற்றும் 2007 ஆகிய வருடங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பங்களித்தமைக்காக தேசிய பாதுகாப்பு தினத்தின் விருதையும் வென்றெடுத்தவராவார்.

காமினி சுசந்த

சிங்கள மொழிக்கான அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருதை வென்ற காமினி சுசந்த, 'ஆரோக்கியா' பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். லேக் ஹவுஸ் ஊடகவியலாளராக 33 வருடகாலமாகப் பணியாற்றிவரும் இவர், 'மிஹிர' சிறுவர் பத்திரிகை ஊடாக 1988 இல் ஊடகவியலாளராகத் தொழிலை ஆரம்பித்தவராவார்.

சிலுமின, ரசந்துன வில் ஆசிரியராகக் கடமையாற்றிய ரோஹன வெத்தசிங்கவின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரசந்துன வுக்கு சுகாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர், இதன் நிமித்தம் விஷேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டாரவின் மூலம் கிடைக்கப்பெற்ற வழிகாட்டல்களை நினைவுகூர்ந்தார்.

'ஆரோக்கியா' பத்திரிகையின் பிரதி ஆசிரியராக நியமனம் பெற்றதோடு சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கட்டுரைகளைத் தொடர்ந்தும் எழுதலானார். அத்தோடு 'சிறுநீரக நோயிலிருந்து மீள்வோம்' என்ற நூலின் ஆசிரியராகவும் விளங்குகின்றார்.

சுகாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதுவதற்கு தாம் கற்றுள்ள மருந்தகவியல் தொடர்பான அறிவு பெரிதும் உதவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள காமினி சுசந்த, சுகாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதும் போது அவற்றின் உள்ளடக்கத்தின் பிழையற்ற தன்மை குறித்து அதிக கவனம் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

கட்டுரைகள் ஊடாக மக்களுக்கு பிழையற்ற சுகாதார தகவல்களை பெற்றுக்கொடுப்பதற்காக விஷேட மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஒத்துழைப்பைப் பெரிதும் பாராட்டுகின்ற காமினி சுசந்த, இவ்வாறான கட்டுரைகள் ஊடாக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுடன் வாழ்வை அமைத்துக்கொள்ள மக்களுக்கு வழிகாட்டக் கிடைத்தமையிட்டு பெரிதும் திருப்தி அடைவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை 'மிஹிர' பத்திரிகைக்கு இவர் சுற்றுச்சூழல் தொடர்பில் எழுதிய கட்டுரைகள் ஏற்கனவே பசுமைப் பாதுகாப்பு விருதைப் பெற்றுள்ளமை தெரிந்ததே.

நதீரா குணதிலக

'டெய்லி நியூஸ்' பத்திரிகையின் இணையாசிரியரான நதீரா குணதிலக்க இம்முறை ஆங்கில மொழிக்கான அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்குரிய விருதை வென்றெடுத்துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 24 வருட கால ஊடகவியலாளராகப் பணியாற்றும் இவர், ஊடகத் துறையில் முதலாவது விருதை 2009 இல் வென்றெடுத்தார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட இவ்விருது, நதீரா குணத்திலக்கவின் சிறுவர்கள் தொடர்பிலான கட்டுரைகளுக்காக வழங்கப்பட்டதாகும்.

2019 ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மூலம் வழங்கப்பட்ட சிறந்த ஊடகவியலுக்கான விருதையும் இவர் வென்றெடுத்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவியாக இருந்த போது 1997 இல் ஊடகவியலாளராக 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இணைந்தார்.

தொழில் சார் ஊடகவியல் வாழ்வில் பாராளுமன்ற மற்றும் நீதிமன்ற அறிக்கையிடல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஊடகவியலாளராக விளங்குகிறார் நதீரா குணத்திலக்க.

இவ்வாறு சிறந்த ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கி ஊக்குவிப்பது குறித்து இலங்கை மருத்துவ சங்கத் தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட இவ்விருது பெற்ற ஊடகவியலாளர்கள், லேக் கவுஸ் நிறுவனத் தலைவர், பணிப்பாளர் சபையினருக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

சுரேக்கா நில்மினி இலங்ககோன்
படங்கள்: சமந்த வீரசிறி, துஷ்மந்த மாயாதுன்னே