அம்பாறை மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் அணி

இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் வலைபந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் அணி கலந்து கொண்டது.

கிளிநொச்சி உள்ளக அரங்கில் இடம்பெற்ற வலைபந்து போட்டியின் முதல் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் அணி முல்லைதீவு அணியை வீழ்த்தி அடுத்த சுற்றான 'சுப்பர் 8' சுற்றுக்கு தெரிவானது.

'சுப்பர் 8' சுற்றில் முழு மூச்சாக போட்டியிட்ட அம்பாறை மாவட்ட அணி 5-–6 என்ற செட் கணக்கில் குருநாகல் மாவட்ட அணியிடம் தோல்வி கண்டு அரையிறுதி வாய்ப்பை பரிதாபமாக இழந்தது. சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் அணியானது அகில இலங்கை ரீதியில் வலைபந்து போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி களமிறங்குவது இது மூன்றாவது தடவையாகும்.

இதில் 'சுப்பர் 8' சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகவும் அமைந்திருந்தது. குறுகிய காலத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த பெறுபேற்றை அடைந்த சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் கழகத்துக்கு ஏராளமான வாழ்த்துகள் குவித்துவரும் நிலையில், எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சவளக்கடை குறூப் நிருபர்