ஆப்கானில் தலிபான் பிடியில் இல்லாத பிரதேசம்

தலிபான்கள் கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போதிலும், அவர்கள் செல்ல முடியாத பிரதேசங்களும் அங்குள்ளன.

அவற்றில் நங்கர்ஹர் மாகாணம் குறிப்பிடத்தக்கது என்று ஆப்கானில் இருந்து கேநிவ்ஸுக்காக செய்தி சேகரிக்கும் அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஹொல்லி மெக்கே தெரிவித்துள்ளார்.

சுமார் 55 ஆயிரம் மக்களைக் கொண்டுள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் சப்பர்ஹர் மாவட்டத்தை, நாட்டின் பல பிரதேசங்களிலும் கொடூரத் தாக்குதல்களை நடாத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் - கே பயங்கரவாதிகள் தளமாகக் கொண்டுள்ளனர்.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து தினமும் குரூரத் தாக்குதல்கள் இடம்பெறும் பிரதேசமாக இது மாறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் - கே பயங்கரவாதிகள் பல வருடங்களாக இப்பிரதேசத்தைத் தங்களது செயற்பாட்டு பிரதேசமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் பதவிக்கு வந்த பின்னர் இங்கு படுகொலைகள் அதிகரித்துள்ளன. தினமும் ஒரு மனிதராவது வீட்டுக்கு வெளியே அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். இதனைச் செய்பவர்கள் யார் என்பதை நாங்கள் அறியமாட்டோம்' என்று கிராமவாசியொருவர் கூறியுள்ளார்.

வீட்டு காவலாளியொருவர் குறிப்பிடுகையில், இங்கு 2015 முதல் ஐ.எஸ். செயற்படுவதால் தலிபான்கள் பகல் வேளையில் மாத்திரம் கடமையில் ஈடுபட்டு இரவானதும் தங்களது முகாம்களுக்கு திரும்பி விடுவதோடு முகாமுக்கு வெளியே எவரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். முன்னைய அரச படையினரும் கூட இப்பிரதேசத்தில் பகல் வேளையில் மாத்திரமே கடமையில் ஈடுபட்டனர் என்றார்.