திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, ஐ.சி.சியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள், இந்தியா – நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ்- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்த நிலையில், வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி கடந்த புதனன்று வெளியிட்டுள்ளது. ஐ.சி.சியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின் படி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருந்த திமுத், முதல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட சதம் மற்றும் அரைச்சதம் என்பவற்றின் காரணமாக 4 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.