பின்தங்கிய கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் 53 பேருக்கு உதவிகள்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் கிரான் பிரதேச மக்களுக்ெகன 120 ஆடுகள் வழங்கிவைப்பு

பின்தங்கிய கிராமிய பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடை வளர்ப்புத் திட்டத்தில் ஆடுகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கிரான் பிரதேச தேவபுரம் சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் ராஜ் பாபு மற்றும் கமநல திணைக்கள அதிகாரிகள் என பலரின் பங்குபற்றலில் 53 பயனாளிகளுக்கு 120 ஆடுகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் "எதிர்கால சமுதாயத்தை போசாக்கு நிறைந்த ஒரு சமுதாயமாக கட்டியெழுப்புவது நமது கடமையாக இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் அதிக நச்சுத் தன்மை உடையதாகவே காணப்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டே இன்றைய அரசாங்கத்தினால் கமத்தொழில் சங்கங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சேதனப் பசளை பயன்பாடு முறையினால் எமது எதிர்கால சமுதாயம் பாதுகாக்கப்படும் மிகவும் ஆரோக்கியமான சமுதாயமாக உருவாகும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிராமிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிராமிய மட்டத்தில் உற்பத்தித் துறையில் தனிநபர் பொருளாதார கட்டமைப்பும் மேம்படுத்தப்படுவதால் அந்தக் கிராமம் தன்னிறைவு அடையும். கிராமங்கள் அபிவிருத்தி செய்வதன் ஊடாக நமது நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் உற்பத்தி துறை சார்ந்து அபிவிருத்தி அடைகின்றது இதற்காகவே அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கிராம மட்டத்தில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் பின்தங்கிய கிராமிய பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் எனது பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் ஊடாக ஆடு வளர்ப்பு திட்டத்துக்காக 19500 குடும்பங்களை இலக்கு வைத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோழி வளர்ப்பு திட்டத்திற்காக 12 187 குடும்பங்களை இலக்குவைத்து 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கிராமிய மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துவதற்காக 200 மில்லியனுக்கும் அதிகமான தொகை கால்நடை வளர்ப்புத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

-இரா.சுரேஷ்குமார்
(இராஜாங்க அமைச்சரின்
ஊடக இணைப்பாளர்)