எட்டு வருடங்களாக உதிரம் கொடுத்து உயிர் காக்கும் பெண்..

'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் குருதிக்கொடை பணி மகத்தான சேவையாகும். இச்சேவையானது தானத்தில் சிறந்த தானமாகவும் கருதப்படுகின்றது. அந்த வகையில், 'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் உன்னதமான பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள மனிதாபிமான சேவையாளர்கள் தங்களது உயிரோட்டமான செயல்பாடுகள் தொடர்பில் தினகரனுக்காக மனம் திறக்கின்றனர்.

நாம் மனிதநேய மனப்பாங்கோடு இருந்துகொண்டு அடுத்தவரின் உயிர் காக்க முன்வர வேண்டும். ஒருமுறை இரத்ததானம் செய்த பின்னர் அடுத்த சந்தர்ப்பம் எப்போது வரும் என்ற அவா எனக்குள் உருவாகின்றது என்கிறார் கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பிரிவு பட்டதாரியும் பகுதிநேர விரிவுரையாளருமான கணேசன் சுகன்யா.

கணேசன் சுகன்யா

மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த சுகன்யா தனது பல்கலைக்கழகக் காலத்தில் 21ஆவது வயதிலேயே இரத்ததானம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

தற்போது 28 வயதை எட்டிப்பிடித்திருக்கும் அவர், இரத்ததானம் எனும் உன்னதப் பணி பற்றி மேலும் கூறுகையில்,

நான் பல்கலைக்கழத்தில் பயின்றுகொண்டிருந்தபோது மாணவர்கள் என்ற வகையில் சமூகத்திற்கான எமது பங்களிப்பு) எனும் சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இந்நிலையில் எனது பட்டப்படிப்பின் இரண்டாவது வருடத்தில் இரத்ததான முகாமொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் என்று குருதிக்கொடையாளர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். அப்போதே நானும் முதற்தடவையாக இரத்ததானம் செய்வதற்கு உந்தப்பட்டேன்.

அடுத்தவரின் உயிரைக் காக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு சிறு வயது முதற்கொண்டே இருந்து வந்தது.

கஷ்டத்திலிருப்போருக்கு என்னால் பண உதவி செய்ய முடியாத நிலை இருந்தபோதும், மகத்தான தானமான இரத்ததானத்தை என்னால் செய்யலாமென்று உணர்ந்தேன்.

எனது வீட்டாருக்குத் தெரிவிக்காமலேயே நான் முதற் தடவையாக இரத்ததானம் செய்தேன். இதில் ஆத்ம திருப்தியையும் உணர்ந்தேன்.

பின்னர் இந்த விடயத்தை எனது வீட்டிலுள்ளோருக்கு தெரியப்படுத்தியபோது, எனது சகோதரர்களும் இரத்ததானம் செய்யத் தொடங்கினர். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

விபத்துகள் தொடர்பான தகவல்களை செய்திகளில் கவனிக்கும்போது எமது குருதிக்கொடையின் பெறுமதி இன்னும் அதிகம் என்று தோன்றும்.

பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு வருடாந்த நிகழ்விலும் நாம் விரும்பி இரத்ததானம் செய்து வந்தோம்.

நாம் இரத்ததானம் செய்யும்போது எமது உடலில் ஒரு புதுவிதமான இரத்த உருவாக்க கட்டமைப்பு செயற்படுகின்றது.

4 மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்வது நல்லது எனவும் இதனால் புதிய இரத்த செல்கள் உருவாகுவதாகவும் கூறப்படுகின்றது. இரத்ததானம் செய்வதால் எமது உடல் நிலையும் ஆரோக்கியமடைகின்றது.

எனது குருதிக்கொடையால் இன, மத, மொழி, சிறியோர், பெரியோர், ஆண், பெண் என்ற அம்சங்களைக் கடந்து எல்லோரும் பயனடைகின்றார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.

எனது இரத்தம் எந்த வங்கிக்கு போகின்றது, யாருக்கு பயன்படப் போகின்றது என்பவை தொடர்பில் அறிய எனக்கு விருப்பமில்லை.

ஆனால், எல்லோரும் மனிதர்களே என்ற அடிப்படையில் யாரோ தேவைப்பாடுடைய ஒருவரது தேவையை பூர்த்தி செய்ய எனது இரத்தம் உதவி செய்கின்றது. அந்த மனநிலையே எனக்கு நிறைவைத் தருகின்றது.

சம காலத்தில் மனித சமூகமானது, பால், பருவம், இன, மத, மொழி பேதத்தினால் வேறுபட்டிருக்கின்றோம்.

ஆனால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தேவைப்பாடுள்ள எந்த நோயாளிக்கும் எனது இரத்தம் போய்ச் சேர்ந்து, அவர் உயிர் பிழைக்க முடிகின்றது என்றால் அதைவிட ஆத்ம திருப்தி எனக்கு வேறொன்றும் தேவையில்லை.

இந்நிலையில் இன, மத, மொழி, பிரதேச, பால் வேறுபாடு கடந்த உயிரைக் காப்பாற்றும் உன்னதமான இரத்ததானப் பணியில் வேறுபாடின்றி அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமென்பதே எனது அவா.

இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு பட்டிதொட்டி தொடங்கி அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்.

இரத்ததானம் செய்வதினால் எமது உடல்நிலைக்கு பாதிப்பு இல்லை என்ற விடயமும் சமூகத்தை சென்றடைய வேண்டும் என்கிறார் சுகன்யா.

இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன்

இரத்ததானம் செய்பவர்கள் சமூகத்தில் கௌரவிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவர்கள் என, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினுடைய இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன் தெரிவிக்கின்றார்.

இரத்ததானம் அளிக்கும் செயல்முறை பற்றி வைத்திய அதிகாரி கீர்த்திகா சற்று விவரித்துச் சொன்னார்.

இலங்கையிலும் பல்வேறுபட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட நோயாளிகள் காணப்படும் நிலையில், அந்நோயாளிகளுக்கு குருதித் தேவைப்பாடு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், இலங்கையிலுள்ள சகல இரத்த வங்கிகளும் தாமாக விரும்பி முன்வந்து இரத்ததானம் அளிப்பவர்களில்; மாத்திரமே தங்கியிருக்கின்றன.

பொதுவாக மருந்துகளை மருந்தகங்களில் வாங்குவது போல இரத்தத்தை மருந்தகங்களில் வாங்க முடியாது.

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் சுகாதார சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது.

ஆகையால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அரச சுகாதாரத்துறையினராகிய நாம் உள்ளோம்.

இந்நிலையில் மக்கள் தாமாக முன்வந்து வழங்கும் குருதியினால் இன்னொருவரின் உயிரைக் காப்பாற்ற முடிகின்றது.

இந்த விழிப்புணர்வு இன்னமும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டால் ஆர்வமும் தியாக சிந்தையும் உள்ள அனைவரும் இரத்ததானம் செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரத்ததான முகாம்களை நடத்த முடியாமல்; போனவேளையில் இரத்ததானம் கிடைப்பதில் சற்று பின்னடைவு எதிர்நோக்கப்பட்டது.

விபத்துகள், தலசீமியா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் மகப்பேற்றினால் ஏற்படும் இரத்தப்போக்கை ஈடுசெய்வதற்கும் இரத்தம் தேவைப்படுகின்றது.

இந்தத் தேவைப்பாடு இரத்ததானம் செய்பவர்களினாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது.

மனிதர்கள் அனைவரினதும் இரத்தம் சிவப்பு நிறம் என்பதைத் தவிர, அதற்கு இனம், மொழி, பால் வேறுபாடுகள் இல்லை.

இரத்ததானம் செய்பவர்களும் இனம், மதம், மொழி, பால் வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம் என்கின்ற நோக்கிலேயே இரத்ததானம் செய்கின்றார்கள். இதனால் இவர்கள் உன்னத ஸ்தானத்தைப் பெற்ற தியாகிகள் என்றே நான் கருதுகின்றேன்.

குருதிக்கொடையாளர்கள் இரத்த வங்கிக்கு நேரடியாக வந்து இரத்ததானம் செய்வதும் சமூக சேவை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களால் இரத்ததான முகாம்கள் நடத்தப்படும்பொழுது அங்கு வந்து இரத்ததானம் செய்வதும் இடம்பெறுகின்றது.

அந்த வகையில், இந்த வருடத்தின் நவம்பர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு சுமார் 900 பேர் தன்னார்வத்துடன் நேரடியாக வந்து இரத்ததானம் செய்திருக்கின்றார்கள். மேலும், சுமார் 2,000 பேர் இரத்ததான முகாம்களில் இணைந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.

இரத்ததானம் செய்வதில் 80 சதவீதம் ஆண்களாகவும் 20 சதவீதம் பெண்களாகவும் காணப்படுகின்றனர்.

இதேவேளை, ஒரு குருதிக் கொடையாளியிடமிருந்து ஒரு தடவையில் 450 மில்லிலீற்றர் (1 பைந்து) இரத்தத்தை பெற முடியும். ஒரு கொடையாளிடமிருந்த பெறப்படும் ஒரு பைந்து இரத்தத்தை 3 நோயாளிகளுக்கு பயன்படுத்துகின்றோம்.

குருதிக் கொடையாளி ஒருவர் ஒரு தடவை இரத்ததானம் செய்து 4 மாதங்கள் பூர்த்தியடைந்த பின்னர் திரும்பவும் இரத்ததானம் செய்யலாம்.உண்மையில் இரத்ததானம் செய்பவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அவர்கள் என்றென்றும் நன்றி கூரப்பட வேண்டும். 15 அல்லது 20 தடவைகள் இரத்ததானம் செய்த தியாகச் செம்மல்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.

இரத்தக் கொடையாளிகளைக் கூட்டிணைத்து ஒரு செயல் அணியை உருவாக்கினால், மனிதநேய சக வாழ்வுக்கும் சமூக ஐக்கியத்திற்கும் அது உறுதியான அத்திவாரமாக இருக்கும்.

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அவசர நோயாளிகளுக்கான இரத்தத் தேவைகளில் சுமார் 40 சதவீதம் மாத்திரம்தான் உள்ளுர் இரத்தக் கொடையாளிகளிடமிருந்து கிடைக்கின்றது. ஏனைய 60 சதவீதம் வெளி மாவட்ட கொடையாளிகளின் இரத்தம் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. இதுவும் இன, மத, மொழி, பால், பிரதேச வேறுபாடுகள் கடந்து, மனிதாபிமான தியாகத்திற்கு ஒரு தடையல்ல என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது என்கிறார் அவர். தன்னார்வலர்களைத் தவிர, பல்வேறு பொது அமைப்புகளும் சமூகசேவை நிறுவனங்களும் தேவையானபோது இரத்ததானம் செய்வதில் முனைப்புக் காட்டுகின்றன.

அந்த வகையில் ஏறாவூரிலும் மனிதநேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக இஸ்லாமிய ஐக்கிய ஒன்றியம் தெரிவித்தது.

சமீப காலங்களில் அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட 4 இரத்ததான முகாம்களிலும் தலா 150 பேருக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாகக் கலந்துகொண்டு இரத்ததானம் செய்த இரத்தத்தை மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு வழங்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் வரவேற்கத்தக்க விடயமானது, இரத்ததானம் செய்ய முன்வருவோரில் முஸ்லிம் பெண்களும் யுவதிகளும் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோராக உள்ளனர் என்று பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முகம் தெரியாத யாரோ உறவுகள் இன, மத, மொழி, பால், பிரதேச வேறுபாடுகள் பாராது தானமாக அளித்த இரத்தத்தினால் தாம் உயிர் வாழ்வதாகவும் உயிருக்காக ஊசலாடிக் கொண்டிருந்த வேளையில் தங்களுக்கு தானமாக இரத்தத்தை வழங்கிய மேன்மைக்குரிய கருணை உள்ளங்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்றும் அவசர சிகிச்சை வேளையில் இரத்ததானத்தைப் பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர். சுகந்தினி