2nd Test; SLvWI: இலங்கை அணி நிதான ஆட்டம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

காலியில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டி மழை காரணமாக தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி காலை நேரம் முழுவதும் மழையால் தடைப்பட்டு, தேநீர் இடைவேளைக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டுக்கு 106 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது. முதல் டெஸ்டில் சதம் பெற்ற அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 90 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரொஸ்டன் சேஸ் பந்துக்கு அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் பெத்தும் நிசங்க நேற்றைய நாள் முழுவதும் களத்தில் இருந்து 61 ஓட்டங்களை பெற்றார். அவர் இந்த ஓட்டங்களை பெற 109 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை பெற்றார்.

முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஓஷத பெர்னாண்டோ 10 பந்துகளுக்கு 2 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தார்.

இதன்படி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இலகு வெற்றியீட்டி இருக்கும் இலங்கை அணி இந்த டெஸ்டை சமநிலை செய்தாலே தொடரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் சரித் அசலங்க இலங்கையின் 157ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகம் பெற, வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியில் ரஹ்கீம் கோர்ன்வோல், ஷனோன் கேப்ரியல், ஜெரேமி ஷொலசானோ ஆகியோருக்குப் பதிலாக வீரசம்மி பெர்மோல், ஷேய் ஹோப் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.