வெற்றி விளிம்பில் பாகிஸ்தான்

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியுள்ளது.

பங்களாதேஷின் சிட்டக்ராமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் நான்காவது நாளான நேற்று பாகிஸ்தான் அணிக்கு 202 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆபித் அலி 56 ஓட்டங்களுடனும் அப்துல்லா சபீன் 53 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இதன்படி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற 10 விக்கெட்டுகளும் கைவசம் இருக்க 93 ஓட்டங்களை பெற்றால் போதுமானது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 330 ஓட்டங்களை பெற்றது. விக்கெட் காப்பாளர் லிட்டோன் தாஸ் சதம் (114) பெற்றதோடு முஷ்பீகுர் ரஹீம் சதத்தை தவறவிட்டார் (91). தொடர்ந்து ஆபித் அலியின்் சதத்தின் மூலம் (133) பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களை பெற்றது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஷஹீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.