வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் அன்னாசிகல தமிழ் வித்தியாலயம்

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம கல்வி வலயத்துக்குட்பட்ட அன்னாசிகல தமிழ் வித்தியாலயம் வளர்ச்சிப் பாதையில் முன்னுதாரணமான பாடசாலையாக விளங்குகின்றது. ஜெர்மன்,ஸங்ட் இங்பர்ட் நகரைச் சேர்ந்த கலாநிதி அலேக்ஸாடர் பொக்ஸே அவர்களினால் (INGE AND DR.ALEXANDER POCSAY,CITY OF SANKT INGBERT,GERMANY) இந்த வித்தியாலயத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் இன்று ( 30.11.2021)செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்படுகின்றன. 

பேருவளை,சீனன்கோட்டை சமூக ஆர்வலர்களான இர்ஸான் முஹம்மத், றிளா முஹம்மத் உள்ளிட்ட குழாத்தினரின் ஏற்பாட்டில் இந்த வகுப்பறைக் கட்டடம் அன்பளிப்பாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி அதிபர் ஏ.ஸீ.எம்.றிப்கான் தலைமையில் இடம்பெற்றது. 

இன்றைய திறப்பு விழா நிகழ்வில் பிள்ளைகளுக்கான சிறப்பு நிகழ்வாக மக்கள் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம் கையளிக்கப்படவுள்ளது. பிள்ளைகளுக்கான பாதணிகளும் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. பாடசாலைப் பிள்ளைகளின் குடும்பங்களுக்கு கொரொனா தொற்றுகால நிவாரணமாக உலர் உணவுப் பொதிகளும் ஜெர்மன் பிரமுகர்களின் உதவியில் வழங்கப்பட்டுள்ளன. வசதி குன்றிய தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் இப்பாடசாலையினதும், பிள்ளைகளினதும் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்யும் இணைப்பாளர்களான இர்ஸான் முஹம்மத் உள்ளிட்ட குழாத்தினருக்கு அதிபர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.  

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமூகசேவை ஆர்வலர்களின் அனுசரணையில் பேருவளை இர்ஸான் முஹம்மத் உள்ளிட்ட குழுவின் ஏற்பாட்டில் மேற்படி அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் விளையாட்டு மைதானமும் புனரமைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் மூடப்படவிருந்த இப்பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பப்பட்டு வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என அதிபர் தெரிவித்தார். 

தோட்டப்புற பசுமையான சூழலில் அமைந்துள்ள இப்பாடசாலையின் அதிபராக ஏ.ஸீ.எம்.றிப்கான் கடந்த 2008ஆண்டு இறுதியில் பொறுப்பேற்றதிலிருந்து பாடசாலை சிறந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதுடன் ஐந்தாண்டு காலத்தில் பதினெட்டு விருதுகளைப் பெற்று பாடசாலை பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 1967ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பாடசாலையொன்றாக கோவில் களஞ்சியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு சீடா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1987இல் தனியான இடத்தில் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 

 பாடசாலையில் ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைய வேண்டுமென திடசங்கற்பம் கொண்ட அதிபர், மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளல் என்பதை இலக்காகக் கொண்டு மாணவர்களுக்கான பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இத்திட்டத்தின் பிரதிபலனாக பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 2015ஆண்டில் டீ.எஸ். சினேகா என்ற மாணவி 164புள்ளிகள் பெற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடிக்கொடுத்துள்ளதுடன் பாடசாலை வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார். இந்த மாணவி தற்போது தர்காநகர் மகளிர் கல்லூரியில் மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். 

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அதிபர்களுக்கான 'பிரதிபா பிரபா' தேசிய விருது தேர்வில் அதிபர் றிப்கான் தொடர்ச்சியாக மூன்று வருடம் தொடர் விருதுகள் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்துக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்மை குறிப்பிடத்தக்கதாகும்.கல்வி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் பல்வகைப் போட்டி மற்றும் செயல்திறன் நிகழ்வுகளில் பாடசாலையை பங்களிப்புச் செய்ய வைத்து பல விருதுகளை பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கவும் இவர் வழிகாட்டியுள்ளார்.  

இப்பாடசாலை சுகாதார மேம்பாட்டு தேர்வில் வலய,மாவட்ட ,தேசிய ரீதியில் முதலாமிடத்துக்கான தங்க விருது பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித் திறன் ,விசேட நடைமுறைக்கான பிரவேசம் (Best Practice), மேல் மாகாணத்தின் சிறந்த சுற்றுச் சூழல் கொண்ட பாடசாலை ஆகிய தேர்வுகளில் தலா இரண்டு தடவைகள் விருதுகளை பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் இப்பாடசாலை டெங்கு நுளம்பற்ற சிறந்த பாடசாலை தேர்வில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தெரிவாகியுள்ளதுடன் சிறந்த வகுப்பறைக்கான (Sustainable Class room) விருதையும் கடந்த காலங்களில் பெற்றுள்ளது.   களுத்துறை மாவட்டத்தில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்த பெருந்தோட்டப் பாடசாலைக்கு அரச மற்றும் துறைசார் உதவிகள் கிடைக்கப் பெற்று அதிபரின் திட்டங்கள் வெற்றி பெறவும் உதவி மற்றும் ஒத்தாசைகள் கிடைக்கப் பெற்று இலக்கையடைய வாழ்த்துவோம்.   

எம்.எஸ்.எம்.முன்தஸிர்
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)