சர்வதேச கிரிமினல் அமைப்புகளுடன் பயங்கரவாத இயக்கங்களின் நெருக்கம்

பயங்கரவாத அமைப்புகள் எழுபதுகளில்தான் சர்வதேச அரங்கில் நுழைந்தன எனலாம். இதற்காக பயங்கரவாத இயக்கங்கள் அல்லது கிரிமினல் அமைப்புகள் இதற்கு முன்னர் செயற்பாட்டில் இருக்கவே இல்லையா என்று எவரும் புருவம் உயர்த்தி விடக் கூடாது. பெரும்பாலான நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள், திருடர்கள் இருக்கவே செய்தனர். கிராமங்களைத் தாக்குவது, அவர்களைக் கொல்வது என்பன நடந்து கொண்டுதான் இருந்தன.

தமிழகத்தின் பாலை நிலத்தில் வழிபறித் திருடர்கள் விசேஷங்களுக்காக ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு மட்டும் வண்டிகளில் பயணிக்கும் போது, இத்திருடர்கள் வழிமறித்து பொருட்கள் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். அரசர்களுக்கு கொள்ளையர் எப்போதுமே பிரச்சினையாக இருந்தார்கள்.

இவர்களை அடக்குவதற்காக அரசர்கள் நேரடியாகவே படையெடுத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழகத்தைக் குறிப்பிடுவது ஒரு அடையாளத்துக்குத்தான். உலகெங்கும் அரசர்களுக்கு சவால் விடுக்கும் கொள்ளையர் கும்பல்களும் கடற்கொள்ளைக்காரர்களும் இருந்தனர். ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் படை திரட்டுவதற்காக இக்கொள்ளைக் கும்பலுடன் இணைந்து ஆட்சியாளர்களை எதிர்ப்பதெல்லாம் வரலாற்றில் நடைபெற்றிருக்கிறது.

உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வடிவங்கள்தான் மாறுமே தவிர நிகழ்வுகள் அவையேதான்.

இன்றைய உலகில் நாடுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இரண்டு அமைப்புகள் சவால் விடுத்து வருகின்றன. முதலாவது, அரசியல் நோக்கங்கள் கொண்ட பயங்கரவாத அமைப்புகள். இரண்டாவது கிரிமினல் அமைப்புகள். தலிபான் அமைப்பை அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பாகவும், 'மெடலின் கார்டல்' என அழைக்கப்பட்ட கொலம்பிய போதைப் பொருள் அரசனாக வர்ணிக்கப்பட்ட பெப்லோ எஸ்கோபாரின் போதைப் பொருள் கடத்தல் அமைப்பை கிரிமினல் அமைப்பாகவும் உதாரணம் சொல்லலாம்.

எப்படி அரசர்களுக்கு எதிரான புரட்சிக் குழுக்கள் திருடர் கூட்டங்களுடன் பொது நோக்கமொன்றுக்காக இணைந்தனவோ அவ்வாறே இன்றைய அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்புகளும் சர்வதேச குற்றவியல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இஸ்ரேலை ஒழித்துக் கட்டி பாலஸ்தீனை திரும்பப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவானதே PLO என அழைக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம். இதன் தலைவர் யாஸர் அரபாத். இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களையும் விமான கடத்தல்களையும் நடத்தி, எழுபதுகளில் உலகையே அதிர வைத்தது இந்த அமைப்பு. அமெரிக்காவுக்கு நேரடியாகவே சவால் விடுத்தது. இதே காலப்பகுதியில் ஐரோப்பாவைச் சேர்ந்த பல கிரிமினல்கள் கடத்தல், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் கார்லோஸ் ஒருவன். அவனைத் தேடி உலகெங்கும் தேடுதல்கள் நடத்தப்பட்டன.

எனினும் இஸ்ரேலை மையப்படுத்தி உருவான இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கும் இக்கிரிமினல் அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முக்கிய காரணம், இஸ்ரேலுக்கு எதிரான அமைப்புகளுக்கு எண்ணெய் வளம் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளின் நிதி போதுமான அளவுக்குக் கிடைத்தது. ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலை அமெரிக்கா மீது அல்கைதா தொடுத்த 9/11 தாக்குதலின் பின்னர் அடியோடு மாறியது. இதற்கு முன்னரேயே பாலஸ்தீன விடுதலை இயக்கம் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அரசியல் தீர்வுக்கு முன்வந்திருந்தது. ஜோர்தான், டூன்சியா ஆகிய நாடுகளும் பி.எல்.ஓ.வுக்கு அடைக்கலம் அளிப்பதை நிறுத்தியிருந்தன. யாஸர் அரபாத் தன் தீவிர நிலைப்பாடுகளில் இருந்து விலகிக் கொண்டிருந்ததால் ஹமாஸ் போன்ற வேறு அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாத இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

9/11 தாக்குதலின் பின்னர் பயங்கரவாதம் எந்த அளவுக்கு செயல்பட முடியும் என்பதையும் அத்தகைய தாக்குதல்கள் ஏற்படுத்தக் கூடிய உலகளாவிய விளைவுகள் தொடர்பாகவும் அறிந்து கொண்ட எண்ணெய் வளம் மிக்க பல மத்திய கிழக்கு நாடுகள் இவற்றுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்திக் கொண்டன. இன்னும் கொஞ்சம் பின்னால் சென்றால், உலக சமாதானத்துக்கு நீடித்த அச்சுறுத்தலாகத் திகழ்ந்த அமெரிக்க – ரஷ்ய குளிர் யுத்த காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் நாடுகளை அணிசேர்த்துக் கொண்டன.

அமெரிக்கா ஒரு நாட்டுடன் முரண்படும் போது அந்நாட்டுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதும், அதேபோல அமெரிக்கா நடந்து கொள்வதும் அக்காலத்தில் வாடிக்கை. உதாரணத்துக்கு 1962 கியூப பிரச்சினையைச் சொல்லலாம். அமெரிக்காவுக்கு அண்மித்த கியூபாவில் ரஷ்யா ஏவுகணைத் தளமொன்றை அமைத்ததை அமெரிக்கா அச்சுறுத்தலாகப் பார்த்தது. அப்பிரச்சினையில் இறுதி நேர விட்டுக்கொடுப்பை ரஷ்யா மேற்கொண்டிருக்கா விட்டால் அது மற்றொரு உலகப் போராக உருவெடுத்திருக்கலாம்.

குளிர் யுத்தம் சோவியத்தின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. உலக யுத்த அச்சமும், நாடுகளின் பிரச்சினைகளில் தலையிட்டு அமெரிக்காவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ எதிராக உசுப்பி விடுவதும் நின்று போனது. கார்லோஸ் போன்ற பயங்கரவாதிகள் சர்வதேச கிரிமினல்களின் கொட்டமும் அடக்கி ஒடுக்கப்பட்டது. மத்திய கிழக்கு ஆயுத இயக்க நடவடிக்கைகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எனினும் இஸ்ரேலை மையப்படுத்திய ஆனால் மத்திய கிழக்குக்கு வெளியே இயங்கக் கூடிய பயங்கரவாத இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான் என்பனவற்றை அமெரிக்காவை குறிவைத்த நாடுகளாகக் குறிப்பிடலாம். இவற்றுக்கு மத்திய கிழக்கு நாடுகள் அடைக்கலமும் போஷணையும் அளிக்க முன்வரவில்லை. உதவும் நாடாக ஈரானைச் சொல்லலாம். உதவும் பெரு நாடாகத் திகழ்ந்த லிபியாவும் அழியுண்டு போனது. ஈரான், சிரியா போதிய பாதுகாப்பும், நிர்வாகமுமற்ற நாடுகளாகத் திகழ்வதால் இவ்வியக்கங்கள் அங்கு இயங்குகின்றன. இப் பிராந்தியத்துக்கு வெளியே பயங்கரவாத அமைப்புகளுக்கு இடமும், வசதியும் அளிக்கும் நாடுகளாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் விளங்குகின்றன.

இந்த இயக்கங்கள் தமது எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றுக்கு எதிராக இயங்கக் கூடியவை என்பதால் சீனாவும் ரஷ்யாவும் இந்த அமைப்புகளில் பயங்கரவாத செயற்பாடுகளை பொருட்படுத்துவதில்லை.

மீண்டும் 9/11 தாக்குதலுக்கு பிந்திய உலகை நோக்குவோமானால், பாகிஸ்தானைத் தவிர வேறு நாடுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக் கொண்டன என்றே கூற வேண்டும். விடுதலைப் புலிகளின் அழிவுக் காலமும் இந்த 9/11 தாக்குதலுக்கு பின்னரான உலகச் சூழலில் நிகழ்ந்ததே.

எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பெருமளவு நிதி ஆதாரங்களின்றி இயங்குவது சாத்தியம் அல்ல. நாடுகளின் பொருளாதார உதவி அவற்றுக்கு மிக அவசியம். பாகிஸ்தானை எடுத்துக் கொண்டாலும் தலிபான்களுக்கும், ஐ.எஸ். போன்றவற்றுக்கும் அந்நாடு அடைக்கலம் அளித்து வசதிகள் செய்து கொடுத்துள்ளதே தவிர, நிதி உதவி செய்வதில்லை. நிதி உதவி செய்யும் அளவில் அந்நாடும் இல்லை. இந்த புள்ளியில்தான் பயங்கரவாத அமைப்புகள் சர்வதேச கிரிமினல் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

தலிபான்கள் முல்லா ஒமர் தலைமையில் ஆப்கானிஸ்தானை ஆண்ட போது ஆப்கானில் கஞ்சா மற்றும் அபின் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்த போது தலிபான்கள் தமது செலவுகளுக்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள போதைப் பொருள் உற்பத்தியை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்தனர். உலகில் பெருமளவு பணம் சம்பாதிப்பதற்கு ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் உதவினாலும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் மூலமே மிகப் பெருந்தொகையான பணத்தை ஈட்ட முடியும்.

இந்த வகையில், அல்கைதா, தலிபான், ஐ.எஸ். உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் தமக்கான நிதியாதாரத்தைத் தாமே ஈட்டிக் கொள்ளும் வகையில் போதைப் பொருட்களைக் கடத்தும் கிரிமினல் அமைப்புகளுடன் கைகோர்த்திருப்பது ஒரு புதிய செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்புகளை தகர்க்கும் சர்வதேச முயற்சிகளை மேலும் கடினமாக்கியும் உள்ளது. எழுபதுகளில் பிரபலமாகத் திகழ்ந்த பப்லோ எங்கோபாரின் மெடலின் கார்டல் கொலம்பியாவின் ஏனைய போதைப்பொருள் அமைப்புகளை முறியடித்து முதன்மை இடத்துக்கு வந்ததோடு அந்நாட்டு அரசியலிலும் நுழைந்தது.

அந்த அமைப்பே சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியதோடு ஒரு கிரிமினல் அமைப்பாகவும் இயங்கத் தொடங்கியது. ஒரு போதைப் பொருள் நிறுவனம் கிரிமினல் அமைப்பாகவும் மாறி கொலம்பிய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்திய முதல் சந்தர்ப்பம் அது.

அதே அம்சங்களைத் தற்போது ஆப்கானிஸ்தானில் பார்க்கிறோம். தலிபான் ஆரம்பத்தில் அரசு ஆதரவு பெற்றிருந்த அமைப்பாக இருந்த போதும் போதைப் பொருள் விற்பனை மூலமும், வெளியில் கிரிமினல் ஒப்பந்தங்களை செய்து முடித்தலின் ஊடாகவும் தன் செலவுகளை ஈடு செய்யும் அமைப்பாக தற்போது மாறியுள்ளது.

இப்போது வரி வருமானமும், சட்ட ரீதியாக உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும் நாடாகவும் தலிபான் அமைப்பு திகழ்கிறது.

உலகிலேயே தனி எல்லைகளைக் கொண்ட ஒரு பெயர் பெற்ற நாட்டை அரசாட்சி செய்யும் ஒரே பயங்கரவாத அமைப்பாக தலிபான் விளங்குகிறது.

உலக நாடுகள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.