நேற்று (29) இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை பொலிஸார் மற்றும் CIDயினரை நாடியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பிரடினண்டோ, தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (29) 7.30 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத் தடை, இரவு 9.00 மணியளவில் படிப்படியாக வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இவ்விடயம் நாசகார செயலா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸார் மற்றும் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொத்மலை கிரிட் உப மின்நிலையத்திலிருந்து பியகம கிரிட் உப மின்நிலையத்திற்கு செல்லும் விநியோக கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுகதனவி அனல் மின் நிலைய விவகாரம் தொடர்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமை பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.