திருகோணமலை எண்ணெய் குதங்களை அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளுமா?

கபீர் ஹாசிம் எம்.பி. சபையில் கேள்வி

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கமானது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், அதற்கிணங்க அந்த எண்ணெய்க் குதங்களை இதுவரை மீளப் பெற்றுக் கொள்ளாததேன் என்றும் சபையில் அவர் கேள்வி எழுப்பினார்? 

பாராளுமன்றத்தில் நேற்று மின்சக்தி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: 

தற்போதைய அரசாங்கமானது திருகோணமலை எண்ணெய்க்குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதாக நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளது. எனினும் தற்போது எமது அரசாங்க காலத்தில் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அதனை மீளப்பெற முடியாதுள்ளதாக அதனை தட்டிக்கழித்து வருகிறது. 

எமது அரசாங்க காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுடன் அது தொடர்பில் புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்களே நடைபெற்றுள்ளன. 

தற்போதைய அரசாங்கம் அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கு அந்த புரிந்துணர்வு கடிதப் பரிமாற்றங்கள் எந்தவித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை. மற்றும் தற்போதைய அரசாங்கம் கூறுவதுபோல் எமது அரசாங்கம் இந்திய -_  இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மேற்படி எண்ணெய்க்குதங்களை வழங்கவில்லை. 

அதற்கிணங்க அரசாங்கம் மேற்படி எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதில் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன? அல்லது இந்திய அரசாங்கத்துடன் அது தொடர்பில் வேறு ஏதாவது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்,  ஷம்ஸ் பாஹிம்