விமான நிலையத்தினூடாக புதிய தொற்று ஊடுருவுவதை தடுக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடு

நாட்டை மூடுவது தீர்வல்ல என்கிறார் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஹேமந்த

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கடுமையான கொவிட் வகையான ஒமிக்ரன் பிறழ்வு எமது நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரன் வகையின் புதிய மாறுபாடு ஏற்கனவே உலகம் முழுவதும் பரவிவிட்டதாகவும், சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் நாட்டை மூடுவதால் எந்த பயனும் ஏற்படாது. புதிய தொற்று நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போதைய நிலைமையில் எடுக்க வேண்டிய பிரதான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்ன செய்தாலும் மக்கள் தற்போதைய நிலைமையை சரிவர அடையாளம் கண்டு அதன்படி வாழாவிட்டால் நாட்டில் நோய் பரவுவதை தடுக்க முடியாது. தேவையில்லாமல் பயணம் செய்யாமல் தவிர்ப்பது முகக் கவசம் பயன்படுத்துவது போன்ற விடயங்களைச் செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலைமை தொடர்பாக தினகரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.(பா)