போதைப்பொருள் விநியோகிப்போர், வர்த்தகர்கள் பிரபாகரனை விட மோசமான பயங்கரவாதிகள்

நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பிரபாகரனை விட ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும் போதைக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வளிப்பதற்காக வீரவில சிறைச்சாலை திறந்த வெளிச்சிறையில் செயற்பட்டு வரும் புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக விசேட மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்ட நீதியமைச்சர் அலி சப்ரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் "அம திவி ரித்ம திட்டம்" மற்றும் அந்த நிலையத்தின் தேவைகள் குறித்து கைதிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பிற பொது வசதிகள் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

போதைக்கு அடிமையாகி இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்படும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய நீதியமைச்சர்,

இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். சில இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிடுவது பெரும் அநியாயமாகும். அது குடும்ப அமைப்பை மட்டுமல்ல சமூகத்தையும் சீரழிக்கும். போதைக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினராகும். அதானால் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகஸ்தர்களை அடையாளம் காணவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தண்டனை வழங்கவும் விநியோக வலையமைப்பை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்களை பிரபாகரனை விட ஆபத்தான பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

 

ஷம்ஸ் பாஹிம்