அரை நூற்றாண்டு நிறைவு காணும் வாழைச்சேனை பொதுசன நூலகம்

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே 32கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது வாழைச்சேனை பொதுசன நூலகம். பாசிக்குடா செல்லும் பிரதான பாதையில் பிரதேச சபை அலுவலகம் மற்றும் தபால் நிலையம் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் இந்நூலகம் அமைந்துள்ளது.

அதற்கு முன்னர், வாழைச்சேனை பிரதேசம் கோறளைப்பற்று கிராம சபையாக இருந்த காலத்தில் 1972-.07.-01அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட வாழைச்சேனை பொதுசன நூலகமானது படிப்படியாக வளர்ச்சியடைந்தது. வாசகர்கள் அதிகரித்து வளர்ச்சியடைந்ததன் காரணமாக, வாழைச்சேனை பொது மைதானத்தினுள் வீதியோரமாக புதிய கட்டடம் அமைக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது.

1978இல் ஏற்பட்ட சூறாவளியின் போது நூலகக் கட்டடமும், ஏராளமான நூல் ஆவணங்களும் சேதமடைந்தன. பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்ட நூலகம், 1990களில் இடம்பெற்ற இனவன்செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் பிரதேச சபை கட்டடத்திலேயே நூலகம் இயங்கத் தொடங்கியது. 1994இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தவிசாளராக தெரிவான ம.இராமச்சந்திரன், உபதவிசாளர் அ.சண்முகநாதன் ஆகியோரின் முயற்சியினால் 1994இல் தற்போதுள்ள கட்டடம் உருவாக்கப்பட்டது. அதுவும் கட்டப்பட்டு நீண்ட காலங்கள் திறக்கப்படாமல் இருந்தது. 1999-.03.-20இல்தான் திறக்கப்பட்டு நூலகம் தனியாக இயங்கத் தொடங்கியது.

இவ்வாறாக பல சவால்கள், இடர்களுக்கு மத்தியிலேயே தன்னையும் வளர்த்து, தன் சமூகத்தின் வளர்ச்சிக்கும் கால்கோளாய் நின்றது வாழைச்சேனை நூலகம். எதிர்வரும் 2022-.07.-01இல் ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்யவுள்ள எமது நூலகத்தில் மிக நீண்ட காலமாக சிறுவர் பகுதியொன்றினை உருவாக்க வேண்டும் என்னும் அவாவில் இங்கு பணிபுரிந்த பலரும் காலத்துக்குக் காலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அது இன்றுவரை சாத்தியப்படாமலே போய் விட்டது.

வாழைச்சேனை நூலகத்தில் சிறுவர் பகுதியொன்றினை உருவாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக தற்போது தினகரனில் இக்கட்டுரையைப் பிரசுரிக்கின்றோம். வாழைச்சேனை நூலகத்தின் தேவையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு தினகரன் பத்திரிகை எமக்கு உதவுவது குறித்து நாம் நன்றி கூறுகின்றோம். நாட்டிலுள்ள நல்லுள்ளங்களிடம் இருந்து இந்தப் பணிக்கு உதவி கோரும் முகமாக இந்தக் கட்டுரையினை பிரசுரிக்கின்றோம். கடந்த 50வருடங்களில் வாழைச்சேனையின் மத்தியில் அமைந்திருந்து தமிழ், முஸ்லிம் மக்களதும், ஏராளமான மாணவர்களதும் அறிவுத் தேடலுக்கும், இலக்கிய இரசனைக்கும் தன்னாலான பணிகளை ஆற்றியுள்ளது எமது நூலகம்.

பிரதேச சபையின் கீழ் தற்பொழுது 08பொது நூலகங்களும், 07வாசிகசாலைகளும் இயங்கி வருவதனால் பிரத்தியேகமாக தனித்தனியே நிதி ஒதுக்கீடுகள் வழங்கி, நூலகங்களின் அபிவிருத்திக்கு வலுச்சேர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. இருப்பினும் பல இடங்களில் நன்கொடையாளர்கள், சமூக நலன்விரும்பிகளின் உதவியுடன் நூலகத்திற்கான பௌதீக வளங்கள், மற்றும் நூல், ஆவணங்களைப் பெறுகின்ற நடவடிக்கையானது தொடர்ந்து நடந்த வண்ணம்தான் உள்ளது.

நமது நாட்டினைப் பொறுத்தவரையில் எல்லோராலும் எல்லாப் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது. அவ்வாறான மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் அபயம் அளிக்கின்ற ஒரே இடமாக பொதுநூலகங்களே உள்ளன. பொதுநூலகங்களில் நூல் இரவல் பெற்று படித்தவர்களே இன்று பல உயர் பதவிகளிலும், இலக்கியப் படைப்பாளிகளாகவும், தொழில்வல்லுனர்களாகவும், சமூகத்தின் முன்னோடிகளாகவும் விளங்குகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள், குடும்பம், பணம் தராத நம்பிக்கையினையும் கௌரவத்தினையும் புத்தகங்கள் வழங்கும்.

புத்தகத்தின் மேன்மை உணர்ந்த உலக அறிஞர்கள் எல்லோரும் நூலினதும், நூலகத்தினதும் முக்கியத்துவத்தினை நமக்கு பறைசாற்றிய வண்ணமே உள்ளனர்.

நமது குழந்தைகளை அதிகமாய் புத்தகங்களை நோக்கி நகர்த்த வேண்டி உள்ளது. கைத்தொலைபேசியும் கையுமாய் மாறிப் போன நமது குழந்தைகள் உடல் மற்றும் உளநலன்கள் கெட்டு சிறுவயதிலேயே வெறுமையடைந்து நீர்த்துப் போகாவண்ணம் புதுப்பித்து, அவர்களை சாதனையாளர்களாக மாற்றும் வல்லமை புத்தகங்களுக்கே உண்டு.

அதனை தங்கள் வாழ்நாளில் உணர்ந்திருப்பீர்கள். எனவே, எமது பொதுநூலகத்தின் 50ஆவது வருட நிறைவினை முன்னிட்டு உருவாக்கப்படவுள்ள சிறுவர் நூலகப் பிரிவுக்கு நூல்கள் மற்றும் புத்தக அலுமாரிகள், தளபாடங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக தங்களால் முடிந்த நிதி உதவி அல்லது சிறுவர்களுக்கான புத்தகங்களைப் பெற்று அன்பளிப்பாக வழங்கி எமது நூலகத்தின் வளர்ச்சிக்கும், அதன் வழியே நமது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கும் எங்களுக்கு கரம் கொடுத்து உதவுமாறு தங்களை பேரன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

எஸ்.ஏ.ஸ்ரீதர்
நூலக சேவகர்,
பொதுநூலகம், வாழைச்சேனை