ஐ.தே.க. கட்சியிலிருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

ஐ.தே.க. கட்சியிலிருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க-Arjuna Ranatunga Resigned from the UNP Membership

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான தனது தீர்மனத்தை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இராஜினாமா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது நலனுக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்ததாக தனது கடிதத்தல் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நோக்கத்திற்கான முதல் படியாக 2015ஆம் ஆண்டு தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பலர் கட்சியை விட்டு வெளியேறிய போதிலும், ​​ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காகவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததாக அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய தோல்வியை சந்தித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே தற்போதைய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அத்தகையதொரு செயற்பாடுகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனத் தோன்றுவதால், கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்தவொரு பலனும் இல்லை எனத் தோன்றுவதால், இன்று முதல் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.