தலிபான்களுடன் தெளிவான இராஜதந்திரத்தை அமெரிக்கா தொடரும்

- ஆப்கானிஸ்தானுக்கான  விஷேட பிரதிநிதி

தலிபான்களுடன் தெளிவானதும், நேர்மையானதுமான இராஜதந்திரத்தை அமெரிக்கா தொடரும் என்று தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் விஷேட  பிரதிநிதி தோமஸ் வெஸ்ட், பயங்கரவாதத்திற்கு தீர்வு காணவும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவவும், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை வழங்கவும் சட்டபூர்வமான ஆதரவை அவர்கள் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட ஆப்கானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்க தவறினால் மனிதாபிமான தாக்கங்கள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டு அமெரிக்க காங்கிரஸுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'ஆப்கானிஸ்தானின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து உண்மைக்கு புறம்பான விடயங்களை தலிபான்களின் கடிதம் கொண்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்பே அந்நாடு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்கு துரதிஷ்டவசமாக முகம் கொடுத்துள்ளது. யுத்தம், பல வருட கால வறட்சி மற்றும் பெருந்தொற்று என்பவற்றினால் இந்நிலைமை  ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ட்வீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "இவ்வருடம்  474 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாங்கள் வழங்கியுள்ளோம், இந்த இடத்தில் எமது அணியினரதும்  பங்காளிகளதும்  வலுவான முயற்சிகளைப் பாராட்டுகிறோம். அத்தோடு இந்த குளிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவென  ஐ.நா மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு உதவ எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம். ஆப்கானிய மக்களுக்கு  அமெரிக்கா மனிதாபிமான உதவிகளுடன் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலிபான்கள் சக ஆப்கானியர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக இராணுவத்தை கையகப்படுத்தினால், சர்வதேச சமூகத்தால் வழங்கப்படும் முக்கியமான மனிதாபிமானமற்ற உதவிகள் , பொருளாதாரத்தின்  அடிப்படை வசதிகள், சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அதுதான் நடந்துள்ளது. உதவியைப் பெரிதும் நம்பியிருக்கும் பொருளாதாரமொன்று இவ்வாறு செயற்படலாகாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.