பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி-School Girl Attempt to Abuse

- தைரியமாக போராடி தப்பிய மாணவி

பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரொருவரை மாணவி தைரியமாக எதிர்கொண்டு தப்பித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் (25) பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையிலேயே அவர் இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

கிராமத்திற்குச் செல்லும் கிளை வீதியில், ஸ்கூட்டரில் வந்த ஒருவர், வீதியில் மாணவியை மறித்து, தாக்கி, அருகில் உள்ள பாழடைந்த தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சந்தேகநபர் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது, மாணவி சந்தேகநபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரதேசம் பாழடைந்த பகுதியாக காணப்படுவதால் கடந்த காலத்திலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.