சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பேருக்கு அனுமதி

சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூடாரங்கள் அமைத்தும் பக்தர்கள் தங்கலாம் என கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஒன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.