ஆயுதத்தை காண்பிப்பதாக சென்ற வேளையில் துப்பாக்கிப் பிரயோகம்; 'டிங்கர் லசந்த' சூட்டில் பலி

கைதின் போது ஆயுதத்தை காண்பிப்பதாக துப்பாக்கிப் பிரயோகம்; 'டிங்கர் லசந்த' சூட்டில் பலி-Tinker Lasantha Shot Dead by Police When Taken to Recover

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 'டிங்கர் லசந்த' என அழைக்கப்படும் ஹேவா லுணுவிலகே லசந்த எனும் சந்தேகநபருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் பொலிஸாரின் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வசமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை மீட்டபோது சந்தேகநபர் குறித்த கைத்துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது இடம்பெற்ற பதில் தாக்குதலிலேயே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்த சந்தேகநபர், ஷன்சைன் சுத்தா எனும் சந்தேகநபரின்  கொலை உள்ளிட்ட மேலும் பல குற்றச் செயல்களுடன் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் களுத்துறை குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 2 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.