திருமண இசையால் 63 கோழிகள் பலி

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்ற பாரம்பரியத் திருமண நிகழ்ச்சியில் ஒலித்த இசை, வாண வேடிக்கை ஆகியவை 63 கோழிகள் இறப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அந்தத் திருமண ஊர்வலம் தமது கோழிப் பண்ணையைக் கடந்து சென்றபோது செவிகளைப் பிளக்கும் அளவுக்குச் சத்தமாக இருந்ததாக ரஞ்சித் குமார் பரிடா கூறினார்.

கோழிகள் பயந்ததாகவும், சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை என்றார் பரிடா.

கோழிகள் மாரடைப்பால் மாண்டதாகக் கால்நடை மருத்துவர் ஒருவர் பரிடாவிடம் கூறினார். திருமண ஏற்பாட்டாளர்கள் இறந்த கோழிகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்ததால், அவர் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

இரு தரப்பினரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒப்புக்கொண்டதால் பரிடா புகாரை மீட்டுக்கொண்டார். அதிகச் சத்தம், பறவைகளிடையே இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.