ஐரோப்பாவில் 700,000 கொவிட் உயிரிழப்புகள் பற்றி எச்சரிக்கை

கொவிட்–19 தொற்றினால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 700,000 பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு அதன் ஐரோப்பிய பிராந்தியமாக குறிப்பிடும் 53 நாடுகளில் ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதில் 49 நாடுகளில் 2022 மார்ச் மாதத்திற்குள் அவசர சிகிச்சை பிரிவுகள் “அதிக அல்லது கடுமையான ஆழுத்தத்தை” எதிர்கொள்ளும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பாவில் நோய்த் தொற்று வேகமாக அதிகரிக்கும் நிலையில் ஆஸ்திரியாவில் மீண்டும் முடக்க நிலை கொண்டுவரப்பட்டுள்ளதோடு ஏனைய நாடுகளும் கட்டுப்பாடுகளை கொண்டுவர ஆலோசித்து வருகின்றன.

“தற்போதைய போக்குகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் ஒட்டுமொத்த இறப்புகள் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொடர்பில் உறுதி செய்யப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 4,200 ஆக அண்மையில் இரட்டிப்பாகி உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.