கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் B பக்கேஜ்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைப்பு

இரண்டாவது பாரியஅபிவிருத்தித் திட்டமாக கருதப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசஞாபகார்த்த விமான நிலையத்தைவிரிவுபடுத்தும் திட்டத்தின்இரண்டாவது கட்டம் (B பக்கேஜ்) இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த விமான நிலையத்தை விரிவுபடுத்தும்  திட்டத்தின் இரண்டாவது கட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

தற்போது ஆறு மில்லியன் அளவிலான பயணிகளை வருடந்தோறும்  கையாளும் விமான நிலையத்தால்   மொத்த திட்டமும் பூர்த்தி அடைந்த பின்னர் அதன் அளவை  15மில்லியன் பயணிகள் வரை அதிகரிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பான்_ இலங்கை ஒருங்கிணைந்த திட்டமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தின் B பக்கேஜுக்காக 6.1பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அனைத்து திட்டத்துக்குமான மொத்தச் செலவு நூறு மில்லியன் ரூபாவையும் தாண்டவுள்ளது.

2014ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஹுவா அபே ஆகியோரின் தலைமையில்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய  விரிவாக்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது கைவிடப்பட்டிருந்த இந்தத்  திட்டத்தின் A பக்கேஜின் நிர்மாணப் பணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர்  சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின்  தலையிட்டால் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டது.   முன்னர் மந்த கதியில்  நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னர் B பக்கேஜின் நிர்மாண வேலைகள்  துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

புதிய திட்டம் முழுமையாக பூர்த்தி அடைந்த பின்னர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தும் தளங்களின் அளவு 45வரை அதிகரிக்கப்படுவதோடு அதன் மூலம் தற்போதுள்ள விமானங்கள் நிறுத்தும் வசதி இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

இங்கு ஓடு பாதை நீளமாக்கப்படுவதால் விமானங்கள் புதிய முனைய கட்டடத்துக்குள் பிரவேசிக்க  வசதிகளும் வழங்கப்படும்.

B பக்கேஜின் வெளிமுனைய மேடை பூர்த்தியடைந்த பின்னர் தற்போது காணப்படும் 269000கன மீட்டர் மேடை 479000கன மீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படுவதோடு, அதன் மூலம் எதிர்காலத்தில் அதிகளவு விமானங்களை இயக்கக் கூடிய வசதியும் கிடைக்கும்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் விரிவாக்கப்பட்ட பின்னர் சோதனைக் கூடங்கள் 52இலிருந்து 149வரை அதிகரிக்கப்படுவதோடு  குடிவரவு கூடங்கள் எண்ணிக்கை 21இலிருந்து 53வரையும், குடியகல்வு கூடங்கள் 27இலிருந்து 83வரை அதிகரிக்கப்படும். தற்போது காணப்படும் 8எயார் சைட் பாதுகாப்பு இடங்களுக்கு பதிலாக 30இடங்களும், இணைப்பு கதவுகள் 24வரை அதிகரிக்கப்படும். தற்போதுள்ள விமான பஸ்களுக்கான கதவுகளின் எண்ணிக்கை 6இல் இருந்து 14வரை அதிகரிப்பதோடு விமான நிலைய ஓய்வு அறைகளின் எண்ணிக்கை  நான்கிலிருந்து பத்தாக அதிகரிக்கப்படும்.

புதிய திட்டத்தின் கீழ் வெள்ள நீரை பயனுள்ள வகையில் கட்டுப்படுத்தக் கூடிய வாறு  அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிக்கும் குளங்கள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஆசியாவின் விமான சேவைகள் மத்திய நிலையமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கையின்  அடையாளமாக காட்டும் வகையில் அபிவிருத்தி செய்வது மஹிந்த சிந்தனையினதும்  சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்தினதும்  முக்கிய கொள்கையாகும்.

தமிழில்: வயலட்