படகு விபத்தையடுத்து இடம்பெற்ற வன்முறையில் அதிகளவு சேதங்கள்!

திருகோணமலை, கிண்ணியாகுறிஞ்சாக்கேணி ஆற்றில் ேநற்றுமுன்தினம் காலை படகு கவிழ்ந்து 6பேர் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குபணிப்புரை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி மேற்படிஆற்றில் படகு பாதுகாப்புடன் பயணம் செய்யவும் அதனைப் பராமரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டமை குறித்து விபரங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக விசேட விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி 6பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இது இவ்விதமிருக்க குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் வரை பஸ் சேவை நடத்தப்படுகின்றது. 

படகு விபத்தில் உயிர் தப்பி கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் நேற்று (24) நண்பகல் சிகிச்சையை முடித்து வீடு திரும்பியுள்ளனர். எல்லாமாக 27பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

படகு விபத்து தொடர்பாக மனதை உருக்கும் செய்தியொன்று வெளிவந்துள்ளது. முதியவரொருவர் தனது பேரனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக படகுப் பாதையில் ஏறியிருந்தார். பாதை கரையை அடைவதற்கு சொற்ப தூரமே இருந்தது. இரண்டாம் வகுப்பில் படிக்கும் தனது பேரனை பாடசாலைக்கு கூட்டி வந்து கொண்டிருந்தார். பாதை தண்ணீரில் மூழ்கி, புரண்டு கொண்டிருக்கையில் தன்னையும் பொருட்படுத்தாமல் பேரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நீச்சலடித்தார். அதற்குள் பாதை புரண்டதை கண்ட பலரும் தண்ணீரில் குதித்து மூழ்கியிருப்பவர்களை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் ஓர் இளைஞன் முதியவரிடமிருந்து சிறுவனை வாங்கிக் கொண்டு கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான். நீரின் ஆழத்தில் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் முதியவர் திணறினார். பலரும் ஒரொவரையொருவர் காப்பாற்ற மேற்கொண்ட பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இச்சம்பவம் பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதேசமயம் நேற்றுமுன்தினம் குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கான விசேட துஆப் பிரார்த்தனை நேற்று இடம்பெற்றது.

முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய வளாகத்தில், அதிபர் எஸ்.ஏ.றம்ஸி தலைமையில், நேற்று இந்த பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, மரணித்தவர்களுக்காக துஆப் பிரார்த்தனை செய்தார்கள்.

ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல்!

கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தை அடுத்து அங்கு நடந்த கொந்தளிப்பான நிலைமையை காணொளி எடுத்த செய்தியாளர்கள் சிலர் தாக்கப்பட்டதுடன் பல செய்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டமை குறித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்ட பின்னர் தொலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  தகவல் அறியும் உரிமையை மீறும் விதத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொண்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பெரும் கொந்தளிப்பான நிலைமை உருவாகியதும் ஆர்ப்பாட்டமும் வன்முறைகளும் இடம்பெற்றன.

இளைஞர்கள் கும்பலொன்று ஆக்ேராஷத்துடன் வீதியில் டயர்களை கொளுத்தி வைத்தியசாலை, பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டதாவும் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடும் சேதமாக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆத்திரத்துடன் கோசமெழுப்பியபடி பேரணியாக சென்றனர். அதனை காணொளியாக படம் எடுத்தவர்கள் விரட்டிப் பிடித்து தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டவர்களில் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

இதன் போது தாங்கள் செய்தியாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னரும் பலர் அங்கே சூழ்ந்து கொண்டு, ஊடகவியலாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் கையடக்கத் தொலைபேசிகள், கமராக்கள் பறிக்கப்பட்டு, அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக இங்குள்ள ஊடகவியலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிலரது கையடக்க தொலைபேசிகள் அந்த கும்பலால் திருடப்பட்டுள்ளன. அதேவேளை திருகோணமலையை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் நேரலை ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது, தாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அவரின் இரண்டு கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டு அவற்றிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்ட பின்னர், ஒரு கையடக்க தொலைபேசி திருப்பிக் கொடுக்கப்பட்டதாக குறித்த செய்தியாளர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை சம்பவத்தில் பிரதேசசபை முக்கியஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சஞ்சீவன்