கிண்ணியா பிரதேசமெங்கும் இன்னுமே தணியாத சோகம்!

ஆறு உயிர்கள் பலியான சம்பவத்தின் பின்னணியிலுள்ள தவறுகள் எவை?

ஆற்றில் மூழ்கியவர்கள் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன், மருத்துவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆற்றிய அவசர சிகிச்சைப் பணிகள் பாராட்டத்தக்கவை

படகு விபத்தில் மக்கள் பலியானதைக் கேள்வியுற்றதும், ஒரு  தரப்பினர் ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் வன்முறையில் ஈடுபட்டதுடன் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தமை நியாயமானதா?

கிண்ணியா பிரதேசமெங்கும் பலத்த அதிர்ச்சியும், சோகமும் நிறைந்த செய்தியுடன் நேற்றுமுன்தினம் காலை பொழுது புலர்ந்தது. மக்கள் முதலில் அச்செய்தியை நம்பவில்லை. வெறும் வதந்தியாக அச்செய்தி இருக்கக் கூடாதா என்று பலர் ஏங்கினர். ஆனால் அச்செய்தி உண்மைதான் என்பது பின்னர் தெரிந்து விட்டது.

படகு விபத்து நடந்த ஆற்றுப் பகுதியை நோக்கி மக்கள் உடனடியாகவே விரைந்தோடினர். படகில் சென்றவர்களின் குடும்பத்தினர் அலடியடித்தபடி சம்பவ இடத்துக்கு ஓடோடிச் சென்றனர். எது நடக்கக் கூடாதென்று அனைவரும் நினைத்தனரோ, அது நடந்தே விட்டது.

குறிஞ்சாக்ேகணி ஆறு இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேரை அநீதியாகப் பலி கொண்டு விட்டது. கிண்ணியா பிரதேசத்தை துயரம் சூழ்ந்து கொண்டது. அங்கு சோகம் இன்னும் தணியவில்லை. அழுகைக் குரல்களையே எங்கும் கேட்க முடிகின்றது.

இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெறுவதற்கு எங்கோவொரு இடத்தில் நிலவுகின்ற அலட்சியமே முதற் காரணமாக இருக்க வேண்டும். அக்காரணம் என்ன?

இதுவே பலரது உள்ளத்திலும் எழுகின்ற வினாவாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படகுப் பாதை உடைந்து போகும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் அங்கு நிலவிய குறைபாடு என்னவென்பதை கவனிக்கவில்லையென்பதே மக்களுடைய பொதுவான குற்றச்சாட்டாகும்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தப் பாலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டது. 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலம் 175 மீட்டர் தூரத்தை கொண்டது எனவும் தெரியவருகின்றது.

இந்தப் பாதையில் மக்கள் பயணிப்பதற்காக படகுப் பாதையை கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியன இணைந்து அனுமதி வழங்கியிருந்தன. இந்த அனுமதியானது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே வழங்கப்பட்டதாக அப்பகுதியில் உள்ள மக்கள் குறை கூறுகின்றனர்.

தினகரனுக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக குறித்த சம்பவத்தை நேரில் பார்வையிட நான் உடனடியாகவே அங்கு சென்றிருந்தேன். கிண்ணியா பாலத்தில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக் கூடாதென்பதில் பொலிசார் அக்கறையாக இருந்தனர். அதேவேளை நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் முயற்சிக்கு எவராலும் இடையூறு ஏற்படக் கூடாதென்பதிலும் பொலிசார் அக்கறையாக இருந்தனர்.

அதேவேளை திருகோணமலை_ மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள கிண்ணியா பகுதியில் முப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பிரதேசமெங்கும் ஒருவிதமான அதிர்ச்சியும் பரபரப்பும் சோகமும் நிலவியதைக் காண முடிந்தது.

ஒருபுறம் ஆற்றில் மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்ைகயில் நான் முதல் தடவையாக அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பிரேதங்களை பார்வையிடுவதற்காக கிண்ணியா வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கே ஒரே வரிசையில் ஆறு பேரினதும் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. உடல்கள் அனைத்தும் வெள்ளைத் துணியினால் மூடப்பட்டிருந்தன. வைத்தியசாலை ஊழியர்கள் அதிர்ச்சியுடனும் பரபரப்புடனும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேச மக்களும் அழுது கண்ணீர் வடித்த வண்ணம் இரு கைகளையும் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர். எங்கும் அழுகைச் சத்தங்களே கேட்டதை அவதானிக்க முடிந்தது.

படகு கவிழ்ந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் வரிசையில் கிடத்தப்பட்டிருக்க, மற்றும் ஒரு பக்கத்தில் சிலர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதையும், வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர சிகிச்சை வழங்குவதில் அக்கறை காட்டி வந்ததையும் பார்க்க முடிந்தது. அவர்களது பணிகளை என்றுமே மறக்க முடியாது.

ஒரு பக்கம் பலருக்கும் ஒக்சிஜன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் அம்பியுலன்ஸ் தயாராக நின்றது. இருவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தியோகத்தர்கள் தயாராக நின்றார்கள். அனைத்து வைத்தியசாலை ஊழியர்களும் தமது கடமையை பொறுப்பாக செய்ததை அங்கே பார்க்க முடிந்தது.

குறித்த வைத்தியசாலையை பார்வையிட்ட பின்னர் அதே வீதியால் சம்பவம் நிகழ்ந்த ஆற்றுப் பகுதிக்கு விரைந்தேன். அங்கு சென்று பார்த்த போது படகில் இருந்து ஆற்றுக்குள் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் கிராம இளைஞர்களும் முப்படையினரும் சுழியோடிகளும் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்கள் உட்பட பலரையும் ஏற்றிச் சென்ற அந்த படகை (படகுப் பாதை) பார்த்த போது மூன்று தோணிகள் பொருத்தப்பட்டு மேலால் பலகைகள் போடப்பட்டு பார்ப்பதற்கு பயங்கரமாக தென்பட்டது.

இக்கரையான கிண்ணியாவில் இருந்து அக்கறையான குறிஞ்சாக்கேணிக்கு செல்லும் இந்த படகின் பயணத்துக்கு அனுமதி கொடுத்தது யார் என்பதை தேடி பார்க்க வேண்டியது அவசியம் என்பதை நான் உணர்ந்தேன்.

ஆற்றை கடக்கும் போது பாதுகாப்பு இல்லாதிருந்ததை உணர முடிந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களும் பயணிக்கும் இந்த படகு பாதையின் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கவனமின்றி செயற்பட்டது முக்கிய காரணம் என்பதும் புரிந்தது.

எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதனையே அனைவரும் எதிர்பார்த்தனர். அது நிறைவேறியது.

ஆனாலும் சிலர் கிண்ணியாவில் மிக முக்கியமான இடங்களை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு டயர்களை எரித்து தமக்கு நியாயத்தை பெற்றுத் தருமாறு கோரினர். கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளை திரட்டச் சென்ற ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பறித்து அதில் பதிவு செய்யப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்த விரும்பத்தகாத சம்பவங்கள் அங்கு இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அவர்கள் அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மிகவும் கவலையைத் தருகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இவ்வாறான செயல்களால் அரச அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது.

அரசாங்கத்தினால் பாலம் அமைக்க 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப் பட்டிருந்த போதிலும் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மந்த கதியில் இடம்பெற்று வருவதைக் கண்டித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனாலும் முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்தின் பின்னர் வீதிகளை மறித்து ஊடகவியலாளர்களை தாக்கி ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு முட்டாள்தனமான செயல் என்றே அங்கு நின்றிருந்த பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதேநேரம் கிண்ணியா தள வைத்தியசாலையிலும் ஒருவித பரபரப்பும் பதற்றமும் நிலவிக் கொண்டிருந்தது. அதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டி கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு மிக விரைவாக எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

ஏன் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற வேண்டும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நோயாளர்களின் நலன் கருதி இனமத வேறுபாடின்றி சுகாதாரத் துறையினர் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற வேளையில் வைத்தியசாலைகளுக்கு முன்னால் அதன் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பது மற்றுமொரு தவறான விடயமாகும்.

எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறும்போது இளைஞர்கள் மிகவும் நிதானமாகவும் முன்யோசனையுடனும் செயற்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் பலரதும் கருத்தாக இருந்தது.

அதேசமயம் கிண்ணியா பிரசேதமெங்கும் பெரும் சோகம் நிலவி வருகின்றது. பாடசாலை நோக்கிப் புறப்பட்ட மாணவர்களில் நால்வரைப் பறிகொடுத்த குடும்பத்தினர் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்களது துயரத்தைப் பார்க்ைகயில் எமக்கும் கண்ணீர் வருகின்றது. மீதமான இருவரின் குடும்பத்தினரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறான துயரம் இனிமேலும் நிகழ்ந்து விடக் கூடாதென்பதே அனைவரதும் பிரார்த்தனையாக உள்ளது.

நேரடி ரிப்போட்-:

அப்துல்சலாம் யாசீம்...?

(ரொட்டவெவ குரூப் நிருபர்)