இராஜினாமா கடிதத்தை கையளித்த மஹிந்த சமரசிங்க எம்.பி.

இராஜினாமா கடிதத்தை கையளித்த மஹிந்த சமரசிங்க எம்.பி.-Mahinda Samarasinghe Handed Over His Letter of Resignation as a Member of Parliament

- டிசம்பர் முதல் வாரத்தில் அமெரிக்க தூதுவராக கடமையேற்கிறார்

களுத்துறை மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது எம்.பி. பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள அவர், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க தூதுவர் பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவுள்ள நிலையில், அதில் இலங்கையின் பிரசன்னமும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான தனது 10 வருட அனுபவத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆயினும் தான் அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதில்லையென தெரிவித்த அவர், நாட்டுக்கு சேவையாற்றவே அமெரிக்கா செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா சென்று வந்து மீண்டும் நாட்டுக்கு சேவையாற்றவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.