சிறந்த சமூகத்தை உருவாக்க உழைக்கும் இந்த அரசு விவசாயிகளை கைவிடாது

பெரும் போகத்துக்கான உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதால்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காதென, கிராம பிரதேச அபிவிருத்தி  வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

விதைகளடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், பாதிக்கப்பட்ட விவசாயிகளை, அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது. நாட்டின் ஜனாதிபதி ஒரு நல்ல நோக்கத்தோடுதான் சேதன உரம் தொடர்பான விடயத்தை கையிலெடுத்துள்ளார். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே   இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.    ஏற்கனவே, விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை  வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்த அரசாங்கம், இந்த திட்டத்திலும் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது.

சமூகத்தை அடுத்த  கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வதென, மக்கள் தலைவர்கள்  சிந்திக்கவேண்டும்.  தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை  காணாமலாக்கப்பட்டவர்கள் என விமர்சித்தவர்களே, இன்று அரசியலில்  காணாமல் போயிருக்கின்றனர்.  2009இல்,  முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரே, பல அரசியல்வாதிகள்  நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் அப்படியல்ல  யுத்தத்தின் வலிகளை  அனுபவித்தோம். பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு எங்களிடம்  திட்டமுள்ளது, மாற்றுத் திறனாளிகளுக்கு  திட்டமுள்ளது, சலுகைகளுக்காக விலை போக மாட்டோம் என்று கூறும்  தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம், பாராளுமன்றத்தில் வழங்கும் சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே, இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பரந்தன் குறூப் நிருபர்