மூவின மக்களினதும் பிரச்சினைகளை தீர்த்தால் நாட்டுக்கு சுமையாகவுள்ள மாகாண சபைகள் எதற்கு?

முன்னாள் மாகாண அமைச்சர் அதாவுல்லா

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருந்தால் நாட்டுக்கு சுமையாகவுள்ள மாகாண சபை முறை எதற்கு? அதனை ஒழிக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா எம்.பி தெரிவித்தார். 

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் சகலரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். 

இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

கிண்ணியாவில் நடைபெற்ற எதிர்பாராத விபத்துதொடர்பில் வேதனை அடைகிறோம்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள முதலாவது பாலத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவும் நானும் தான் அடிக்கல் நாட்டிவைத்தோம். நீண்ட கால குறைபாடாக இருந்த பாலங்கள் அமைக்கப்பட்டன. முறையான பாலம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிஞ்சாக்கேணியில் பாலம் கட்டப்படாத குறைபாடு இருக்கிறது.

இதற்கு யாரை குற்றம் சொல்லிப் பயனில்லை. கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை என்பன முறையாக செயற்படுத்தப்படாதது குறித்து திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறேன். இப்படியான இழப்புக்கள் எமக்குத் தேவையில்லை. 

மூவின மக்களின் உரிமைகள் தொடர்பிலும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் பிரிட்டன் காலம் முதல் பல அரசியலமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இறுதியில் சிறிய நாட்டை 09 ஆக பிரித்துள்ளோம்.தமிழ் மக்கள் தமது உரிமையை கோரிய போது 09 மாகாண சபைகளை அமைத்துள்ளோம்.இந்து ஒப்பந்தம் குறித்தும் மாகாண சபைக்களுக்கு ஒதுக்கும் நிதி பற்றியும் பேசுகிறோம். மாகாண சபை முறை எம்மீது ஏற்றப்பட்ட சுமையாகும். அதனை ஒழிக்க வேண்டும். ஆனால் தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் தமது உரிமைகளை கோருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய அரசியலமைப்பொன்றை அமைக்க முடியுமாக இருந்தால் இந்த சுமையாக உள்ள மாகாண சபை முறை எமக்கு எதற்கு வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்