கிண்ணியா படகு விபத்து; சபையில் TNA அனுதாபம்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து அனர்த்தத்தில் பாடசாலை மாணவர்கள் நான்குபேர் உட்பட ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக எஸ்.சிறீதரன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில்  

உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மாணவர்கள் நான்குபேர் உட்பட ஆறுபேர் மரணித்த சம்பவம் நாட்டில் பெரும் கவலையையும் அவலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பாடசாலை மாணவர்கள் உட்பட இருபதிற்கும் மேற்பட்டோர் படகுப் பாதையில் பயணித்த வேளை இந்த அனர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

படகு கவிழ்ந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு பிள்ளைகளுமாக 3 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலை தரக்கூடிய சம்பவமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்