ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம்

பேராயர்  ரஞ்ஜித் ஆண்டகை கவலை தெரிவிப்பு

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வாதுவையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பல தடவைகள் கூறினாலும் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த முற்படுவதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்களால் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யக்கூடிய ஒருவரிடம் இந்தப் பணியை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மையை மட்டுமே தாங்கள் விரும்புவதாகவும் தயவுசெய்து இந்த உண்மையை மறைக்க முயற்சிக்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் பதவியில் இருப்பவர்கள் இந்த தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தவர்கள் என்றும் தற்போது, எதுவுமே நடக்காதது போல் வாழ்கிறார்களெனவும் அப்படியான நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.