நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய குறிஞ்சாக்கேணி படகு விபத்து!

திருகோணமலை மாவட்டத்திலுள்ள குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை மாணவர்கள் அடங்கலாகப் பொதுமக்கள் பலர் மிதவை படகு பாதையில் நேற்றுமுன்தினம் காலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அப்பாதை திடீரென உடைந்தது. அதனால் அதில் பயணித்த நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, அப்படகுப் பாதையில் பயணித்தவர்களில் 13 பேர் கிண்ணியா வைத்தியசாலையிலும் 02 திருகோணமலை வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவமானது, குறிஞ்சாக்கேணி, கிண்ணியா, திருகோணமலை அடங்கலாக நாடெங்கிலும் பேரதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இச்சம்பவத்தினால் ஆத்திரமடைந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இம்மிதவைப் படகு உடைந்ததனால் இவ்வளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை இவ்விபத்தின் நிமித்தம் வன்முறைகளில் ஈடுபடுவதையும் நியாயப்படுத்த முடியாது.

குறிஞ்சாக்கேணி, நடுவூற்று, காக்காமுனை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் கிண்ணியாவுக்குத்தான் அன்றாடம் செல்ல வேண்டியுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே 1945 களில் இங்கு பாலமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பாலம் அண்மைக் காலத்தில் சேதமடைந்து பாதிப்படைந்துள்ளது. அதனால் 750 மில்லியன் ரூபா செலவில் இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் 175 மீற்றர் தூரம் கொண்ட இந்த குறிஞ்சாக்கேணி ஆற்றைக் கடந்து கிண்ணியாவுக்கு செல்லவென தற்காலிக மிதவைப் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணி பிரதேச மக்கள் கிண்ணியாவுக்கு செல்வதற்கு மாற்றுப் பாதை இருந்த போதிலும், இந்த ஆற்றைக் கடந்து குறுகிய நேரத்தில் சென்றடைய முடியும் என்பதால் இம்மிதவைப் படகுபாதையை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் மிதவைப்பாதை பயணிகள் படகு சேவையொன்றை ஆரம்பிப்பதாயின் அச்சேவையில் ஈடுபடுத்தப்படும் படகு அதற்குரிய தகுதியைக் கொண்டிருக்கின்றதா? அப்படகின் பராமரிப்பு நிலைமை எத்தகையது? என்பன தினமும் பரீட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேநேரம் மிதவைப் படகு, இயந்திரப் படகு உள்ளிட்டவற்றில் ஆற்றிலோ அல்லது கடலிலோ பயணிக்கும் போது பயணிகள் உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவை அடிப்படை விடயங்களாகும்.

இவ்விடயங்களில் அதிகாரிகளும் பிரதேச சமூக நல ஆர்வலர்களும் கவனம் செலுத்தி செயற்பட்டிருந்தால் இச்சோக சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் மக்களது கருத்தாக உள்ளது. அதேநேரம் இப்பாலத்தை ஏற்கனவே நிரமாணித்து முடித்திருக்க வேண்டும். இதில் கடந்த கால ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அக்காலப் பகுதியில் 2020 க்கு பின்பு போன்று கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலை இந்நாடு எதிர்கொள்ளவில்லை. இருந்தும் அதனை அவ்வாட்சியாளர்கள் செய்யத் தவறினர். ஆனாலும் தற்போதைய அரசாங்கம் இப்பிரதேச மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இப்பாலத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் பயணிகள் பஸ் சேவையொன்றை நேற்று முதல் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இச்சேவையை ஏற்கனவே ஆரம்பித்திருந்தால் இவ்விபத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து ஏற்படக் காரணமாக அமைந்த காரணிகளை முன்கூட்டியே தவிர்த்து இருந்திருந்தால் இவ்வாறான சோகத்திற்கும் கவலைக்கும் உள்ளாக நேரிட்டிருக்காது.

மேலும் குறிஞ்சாக்கேணி ஆற்றைக் கடப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற மிதவைப் படகைப் போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் படகுச் சேவைகள் உள்ளன. அத்தோடு மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் கூட பாதுகாப்பற்ற தொங்கு பாலங்களை மாணவர்களும் மற்றைய மக்களும் பயணப்பாதைகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே மக்கள் தம் அன்றாட தேவைகளின் நிமித்தம் பயன்படுத்தும் பயணப்பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகளும் பிரதேச சமூகநல ஆர்வலர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேநேரம் குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்றுள்ள படகு விபத்து தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி அதற்கு துணை புரிந்துள்ள காரணிகளை அடையாளம் கண்டு இவ்வாறான அதிர்ச்சிகர விபத்துகள் இனியும் இந்நாட்டில் எங்கும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.