அமைச்சர் நிமல் லான்சா கண்டனம்
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்துக்கும் அந்த விபத்தில் மரணித்தவர்களுக்கும் கிண்ணியா நகரசபை முதல்வரே பொறுப்புக்கூற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
படகுப் பாதை சேவைக்கு அனுமதி பெற்றுக் கொடுத்துள்ள இம்ரான் மஹ்ரூப் எம்பியும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நகரசபை முதல்வர் பதவி நீக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சபையில் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சி எம்.பியான இம்ரான் மஹ்ரூபின் மைத்துனரே படகுச் சேவைக்கு அனுமதி வழங்கிய கிண்ணியா மேயராவார். விபத்துக்குள்ளான படகுப்பாதை சேவையை முன்னெடுத்தவரும் இம்ரானின் நெருங்கிய உறவினராவார் எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சின் அறிவிப்பாக விசேட கூட்டொன்றை நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி விபத்து தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
படகுச் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கூறியும், அனுமதி வழங்கிய கிண்ணியா நகரசபையே இந்த விபத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். கிண்ணியா மேயரின் செயற்பாடுகளே இந்த விபத்துக்குக் காரணம். படகு சேவையை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் கிண்ணியா நகரசபைக்கு இல்லை. இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி படகு சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துத் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய இம்ரான் மஹ்ரூப் எம்.பியின் மைத்துனரே கிண்ணியா நகரசபையின் மேயராக பதவி வகிக்கிறார்.
எஸ்.எம். தௌபீக் எம்.பி பாலத்தை அமைக்க அடிக்கல்லை மாத்திரமே நாட்டினார்.
எனினும் விபத்துக்குள்ளான படகு சேவையை முன்னெடுக்க இம்ரான் மஹ்ரூப் எம்.பியே அனுமதி வழங்கியிருந்தார்.எனவே பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தி இம்ரான் மஹ்ரூப் எம்.பி அரசியல் செய்யப் பார்க்கின்றார். இம்ரான் மஹ்ரூப் எம்.பியும் இந்த விபத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
அப்பம் சுடுவதுபோல பாலத்தை அமைக்க முடியாது. எவ்வாறாயினும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்வதை தடுக்கும் வகையில் குறித்த பாலத்தை விரைவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்