பிரபாகரனை தேசியத் தலைவர் என விளித்த செல்வராஜா எம்.பி

பாராளுமன்றத்தில் நேற்று பாரிய சர்ச்சை

அவர் உரையை ஹன்சாட்டிலிருந்து  நீக்குமாறு ஆளும் தரப்பு கோரிக்கை

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் தமிழர் தேசம் பற்றியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக உரையாற்றியதால் சபையில் கடுமையாக வாய்த் தர்க்கம் ஏற்பட்டதோடு அவர் பயன்படுத்திய ''தமிழர் தேசம்'', "தேசியத் தலைவர் பிரபாகரன்'' என்பவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு ஆளும் தரப்பு எம்.பிகள் வலியுறுத்தினர். ஆனால் சபைக்கு தலைமை தாங்கிய  வேலுகுமார் எம்.பி. அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் ஆளும் தரப்பினர் தொடர்ச்சியாக இடையூறு செய்து சர்ச்சையில் ஈடுபட்டனர். இது தமிழர் தேசமல்ல, சிங்களவர் தேசமென ஆளும் தரப்பு பின் வரிசை எம்.பிக்கள் கூச்சலிட்டனர்.

பாராளுமன்றத்தில் நேற்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி. ''தமிழர் தேசம்'' தேசியத் தலைவர் பிரபாகரன்'' என்ற வார்த்தைகளை கூடுதலாக பிரயோகித்தார். வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைப் பொருள் வர்த்தகம் செய்தாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்த குற்றச்சாட்டை கடுமையாக சாடி உரையாற்றினார்.

இதன் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பொல,

இந்த உயர் சபையில் தேசியத் தலைவராக பயங்கரவாத இயக்கத் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை தாங்கும் உங்களுக்கு (வேலு குமார் எம்.பி) அவரின் மொழி புரிந்திருக்கும். இதனால் இதனை ஹன்சாட்டிலுருந்து நீக்குங்கள் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த சபைக்கு தலைமைதாங்கிய வேலு குமார் எம்.பி '' அவரின் கருத்து வெளியிடும் உரிமைக்கு என்னால் இடையூறு செய்ய முடியாது'' என்றார்.

இதற்கு ஆளும் தரப்பிலிருந்து கடுமையாக எதிர்ப்பு வந்தது. தொடர்ச்சியாக கோஷம் எழுப்பிய ஆளும் தரப்பு எம்.பிக்கள் அதனை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தினர். ''உங்களுடைய கோரிக்கை இருந்தால், நான் அதனை சபாநாயகரிடம் முன்வைக்கின்றேன்'' என வேலுகுமார் எம்.பி பதிலளித்தார்.

இதன்போது எழுந்து நின்ற ஆளும் தரப்பு எம்.பி. மொஹமட் முஸம்மில்,

விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். இந்த நாட்டில் இலட்சக் கணக்கில் மக்களை கொன்றவரை மாவீரராக கூறி இந்த சபையில் கருத்து வெளியிட முடியாது. இது அவரின் கருத்தல்ல. இது இனவாதத்தை உண்டாக்கும் செயலாகும். தயவு செய்து அந்தக் கருத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குங்கள், நீங்களே இப்போது சபைக்கு தலைமை ஆசனத்தில் இருக்கின்றீர்கள். இதனால் நீங்கள் ஹன்சாட்டிலிருந்து நீக்குங்கள் என்றார்.

இதற்குப் பதிலளித்த வேலுக்குமார் எம்.பி, ''எனக்கு சபாநாயகரிடம் முன்வைக்கும் நிலையியல் கட்டளையே உள்ளது. அதன்படி அதனை அவரிடம் முன்வைக்கின்றேன்'' என்றார்.

சர்ச்சை நீடித்ததுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கருத்து முன்வைத்ததோடு ''அனைவருக்கும் கருத்துச் சுதந்திரமுள்ளது. ஒரு தரப்பு சார்ந்த கருத்துக்களை கூறுகையில் அதனை பெரும்பான்மை சமூகம் விரும்பவில்லையென்றால் அதனை தடுக்க முயலக் கூடாது. அவரை மெளனிக்கச் செய்யவும் வேண்டாம்'' என்றார்.

இதனை தொடர்ந்து மேலும் சில ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆட்சேபனை முன்வைத்ததோடு பிரமித பண்டார தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், ''இந்த பாராளுமன்றத்தில் சிறப்புரிமைகளை இவ்வாறு பயன்படுத்த முடியாது. பயங்கரவாத தலைவரை தேசியத் தலைவராக எந்தப் பாராளுமன்றத்திலாவது கூறுவார்களா? அதற்கு அனுமதி வழங்க வேண்டாம்.

இவர்கள் பிரபாகரனை நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்திக்கு சமமாக கூற முற்படுகின்றனர். ஆனால் அவர் பயங்கரவாத தலைவரே என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வேலுக்குமார் எம்.பி. இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குவது தொடர்பான சபாநாயகருக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து தனது உரையை தொடர்ந்த கஜேந்திரன் எம்.பி. '' நாடு அழிவுப் பாதையில் செல்கின்றது. வீடு கொளுத்துகிற ராசாவுக்கு நெருப்பெடுத்துக்கொடுக்கின்ற மந்திரிகளாக நீங்கள் இருக்க வேண்டாம்'' என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சர்ச்சை நிறைவுக்கு வந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்