முத்தான கன்னி நகையும் முதிராத காதல் கனியும் அத்தான் என்றழைக்கும் அழகும்.. அறியாத இன்பம்

பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி

கவியரசர் கண்ணதாசனின் வார்த்தை ஆகாயத்திலிருந்து பிறந்த ஓர் ஆனந்தப்பாடல் இது.  

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா’

டி.எம்.செளந்தரராஜன் - பி.சுசீலா கூட்டணிக் குரலில் ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் மெட்டுக்குள் கவிதை மொட்டுக்களை முகிழ்க்க விடுகிறார் கண்ணதாசன்! சொற்பொருள் இன்பம் என்ன என்பதைச் செவிகள் சுவைக்க, கண்ணிமை மயங்க, இரவின் மடியில் கேட்கும்போது நாமும் ஊஞ்சலில் ஆடுவது போன்ற ஓர் உணர்வைத் தரும் பாடல்.  

சாண்டோ’ சின்னப்பா தேவரின் படங்களுக்கு சுப்பர் ஹிட் பாடல்களைக் கொடுப்பவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன். அவரது இசையில், ‘வேட்டைக்காரன்’ படத்துக்காக கவியரசர், திரைக்கதையின் சாரத்தில் பாதியைப் பாடலில் படம் பிடித்துக் காட்டிய பாடல்..  

‘மஞ்சள் முகமே வருக... மங்கல விளக்கே வருக...
கொஞ்சும் தமிழே வருக... கோடான கோடி தருக...’

இப்பாடலில் மணமகளை, மணமகன் வரவேற்கும் அழகில்தான் எத்தனை மங்கலம் விளங்குகிறது  

‘பெண் பார்க்க வந்தபோது -
தலை மண் பார்த்து நின்ற மாது...
தென்பாண்டு சேலை குலுங்க
என்னைச் சேர்ந்தாலே கண்கள் மயங்க...’

பண்பாடு, பாரம்பரியம், மரபு எனக் கட்டுரையாய் எழுதி விளக்கம் தர வேண்டிய பொருளையெல்லாம் ஒற்றைப்பாடலில் கச்சிதமாகத் தந்துவிட்டார் கண்ணதாசன்.  

‘முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும்..
நான் அறியாத இன்பம் இன்பம்’

- ஒரு ஆடவன் காதலில் இப்படி வார்த்தைகளிட்டு வர்ணித்தால் எந்தப் பெண்தான் மயங்காதிருப்பார்?  

பிறப்பு தொடங்கி இறப்புவரை மனிதன் கண்டுபிடித்த வைபவங்களில் மகத்தானது திருமணம். அத்திருமண நிகழ்வுகளில் எல்லாம் இத்திரைப்பாடல் பங்குபெறுகிறது! ஒரு திரைப்பாடல் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்திட முடியும் என்பது இசையை மீறிய கண்ணதாசன் வரிகளால் சாத்தியமாகி சரித்திரமாகியிருக்கிறது - விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இயக்குநர் தரின் இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் உருவான அந்த அற்புதப் பாடல்..  

‘நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்’ .

கவிதையால் பாலம்

கல்லால், சிமெண்ட், இரும்பு கொண்டு பாலங்கள் கட்டுவார்கள். காதலில் மட்டும்தான் எண்ணங்களாலும் அந்த எண்ணங்களால் பிறக்கும் கவிதைகளாலும் பாலம் அமைத்திடலாம் என்று கண்ணதாசன் கூறுவதாகச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் சரசுவதி ராமனாதன்.  

ஒரு முறை கவிப்பேரரசு வைரமுத்து வானொலியில் வழங்கிய தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் மனம் திறந்துபேசியபோது “உன் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால்.. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு அனைவரும் விலகிச் சென்றுவிடுங்கள் என்றே கேட்பேன்!” என்றார்.  

அந்தப் பாடல் 'பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?’.  

அப்பாடலில் ‘எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா...’ என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் சரணத்தில்..  

‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி’

எனக் காதலை தெய்வம் உரையும் புனித பீடத்தின் அருகில் வைத்த கவியரசரின் கவித்துவத்தை எந்தத் தராசில் வைத்து எடைபோட முடியும்?  

வார்த்தைகளின் வித்தை

நோயின் பிடியில் போராடிக்கொண்டிருக்கும் கணவன், ‘எனது மரணத்துக்குப் பின்... நீ மறுமணம் செய்து கொள்’ என்று மனைவியிடம் சொல்லும்போது பிறக்கும் பாடலிது. துடித்துப்போகும் அவள், ‘சொன்னது நீ தானா சொல்...சொல்... என்னுயிரே..!’ என்று கண்ணீர் சிந்தும் சீதார் கருவியை இசைத்துக்கொண்டே பாடுகிறாள்.  

‘தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை - தெருவினில் விழலாமா?  

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கைப்படலமா?’ என கவியரசு கண்னதாசன் பாடலின் சூழ்நிலையைத் துளியும் மீறிவிடாமல் பண்பாட்டு மரபை வார்த்தைகளில் பூட்டி வித்தையில் வியக்கவைத்துவிடும் இடம் இது.  

மனித வாழ்வின் அன்றாட வினாக்களுக்கு விடை வேண்டுமா? கண்ணதாசன் பாடல்கள் போதும்! சொற்களின் சுருக்கம் கவிதை என்பார்கள். கண்ணதாசனோ ஒரு திரைப்படத்தின் மொத்தக் கதையை உள்வாங்கி ஒருசில வரிகளுக்குள் காட்டும் சூத்திரதாரியாகவே திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு எத்தனையோ நூறு பாடல்களை உதாரணம் காட்டலாம். ‘அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எப்படி எடுப்பது என்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் யோசித்துக்கொண்டிருந்தபோது..  

‘கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்குப் பதிலேதய்யா?
பசுவிடம் கன்று வந்து
பால் அருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?’ -

என்று தனது பாடல் வரிகளில் கதையை முடித்துக் கொடுத்த கண்ணதாசனின் கவித்துவம் தமிழ் இருக்கும் வரை அமரத்துவம் கொண்டது.