கொழும்பு நகர வெள்ளப் பிரச்சினை; களனி கங்கை பன்முக திட்டத்தை அவசியம் அமுல்படுத்த வேண்டும்

கொழும்பு நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கு, தெற்கு அணைச்சுவரை மாற்றி, பன்முகத் திட்டத்தை செயல்படுத்துவ து பிரயோசனமாக அமையுமென பொறியியலாளர் அன்டன் நாணயக்கார ஆலோசனை கூறியுள்ளார்.  

கொலன்னாவை தெற்கிலுள்ள களனி கங்கை  அணைச்சுவர் மற்றும் கொத்தட்டுவ அணைச் சுவர் என்பவற்றை சரியான இடத்தில் அமைத்து,ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள களனி கங்கை பன்முக அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தினால், கொழும்பு நகரை வௌ்ளத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இத்திட்டத்தை முன்வைத்துள்ள நீர்ப்பாசன திணைக்கள முன்னாள் சிரேஷ்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் அண்டன் நாணயக்கார,கொத்தட்டுவ அணைச் சுவரை ஆய்வு செய்வதற்காக கடந்த (20) வருகை தந்த போது இதுபற்றி தெரிவித்தவை. 

கொழும்பு நகரம், வருடாந்தம் வௌ்ளத்தால் பாதிக்கப்படுவது பலரது வாழ்வியலுடன் தொடர்புடைய பிரதான பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த நிர்க்கதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த வெள்ளத்தை தடுப்பதற்கு நிரந்த தீர்வு எட்டப்படின், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க செலவிடும் நிதியையும் சேமிக்க முடியும். அமைச்சர் தினேஷ் குணவர்தன, நீர் வழங்கல் அமைச்சராக இருந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், பல காரணங்களால் இத்திட்டத்தை பூரணப்படுத்த முடியாமல்போனது. 

நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுமதியின்றி, அந்தப் பகுதிகளில் பெருமளவு கட்டடங்கள்   கட்டப்படுவதால்தான், இந்தப்பிரச்சினை ஏற்படுகிறது. வெள்ளம் வடிந்தோட முதலில் முறையான வடிகான்கள் அவசியம். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் களனி பிரதேசத்தில், களனி கங்கைக்கென வடக்கு அணையையும் மற்றும் கொலன்னாவ பிரதேசத்தில் தெற்கு அணையையும் அன்றைய காலப்பகுதிக்கு ஏற்றவாறு ஒல்லாந்தர்கள் அமைத்திருந்தனர். அதன் பின்னர் 1924ல் ஆங்கிலேயர்கள் வெள்ள நீரை கட்டுப்படுத்த கொத்தட்டுவயில் இன்னும் ஒரு அணைச்சுவரைக் கட்டினர். இதனால் கித்தம்பகுவ வாய்க்கால் இரண்டாக பிரிந்தது.  

இதனால், புத்தளத்திலிருந்து ஹமில்டன் வாய்க்காலூடாக கோட்டை பாராளுமன்றத்தி ற்கருகில் வருவதற்கு பயன்படுத்தப்பட்ட படகுகள் பாதை நீர்ப் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

கொழும்பில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்த, களனி கங்கைக்கு தூரமாக அமைக்கப்பட்டுள்ள கொத்தட்டுவ, கொலன்னாவ தெற்கு அணைச்சுவர் தற்போது பொருத்தமற்றுள்ளது. இதனால்,மாற்று அணைச் சுவருக்கான திட்டமொன்றை 1984ல் முன்வைத்தேன்.

களனி கங்கை பன்முக அபிவிருத்தித் திட்டம் என முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை, ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் செயல்படுத்தவில்லை. அண்மையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு விவாதத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். 

பன்முகத் திட்டமாக இதை, செயல்படுத்தினால் நீர், மின்சாரம், குடிநீர், விவசாயத்துக்கான நீர், புதிய குடியேற்றங்கள், மற்றும் வெள்ளப் பிரச்சினை உள்ளிட்ட சகலதுக்கும் தீர்வுகாணமுடியும் என்பதும் அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. 

களனி கங்கை பெருக்கெடுத்து ஒருமுறை பாராளுமன்றம் கூட மூழ்கிய சந்தர்ப்பத்தில், பொறுப்பு வாய்ந்த சகலரும் மகாவலியைப் பற்றி மாத்திரமே பேசினர்.1961ல் இலங்கைக்கு வந்த ரஷ்ய நிபுணர்கள் குழு ஒன்று, களனிகங்கை நீரை குருநாகலுக்கு இயற்கையாகக் கொண்டு செல்ல முடியுமென சுட்டிக்காட்டியிருந்தது.

இதன் விபரங்களையும் 1984இல்,பொறியியலாளர் நாணயக்கார  முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கியிருந்தார். இத்திட்டத்தை செயல்படுத்த அன்று எண்ணியவர்களில், இன்று, பொறியியலாளர் நாணயக்கார மாத்திரமே உயிருடனுள்ளார். 

முத்துராஜவெல பிரச்சினைக்குக் கூட,இவரது   தலைமையிலான குழுவே தீர்வை முன்வைத்தது.எனவே, அரசாங்கம் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கப்படின், களனி கங்கை பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த, தனது தலைமையிலான குழு, ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது என்றார்.