இலங்கை அணி நிதான ஆட்டம் திமுத் கருணாரத்ன சதம் குவிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான முதல் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (01) ஆரம்பமானது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிய நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது..இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன நேற்று (21) தனது 13வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்ன 212 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.

அதன்படி, திமுத் கருணாரத்ன தற்போது 132 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.இலங்கை அணி சார்பாக பெத்தும் நிசங்க 56 ஓட்டங்களையும் ஓசத ,மெத்திவ்ஸ் தலா மூன்று ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த தனஞ்சய டி சில்வா அணியின் தலைவர் கருணாரத்னவுடன் இணைந்து நிதானமாக ஆடி, அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவு அணி சார்பாக கப்ரியல் ஒரு விக்கெட்டடையும் ரோஸ்டன் சேர்ஸ் இரண்டு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

காலியில் இடம்பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்து களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பட்டதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போட்டியின் 23வது ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் அடித்தாடிய பந்து சோர்ட் லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஜெரமி சொலோசனோவின் தலைக்கவசத்தில் பட்டதில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த வீரர் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெரமி சொலோசனோ டெஸ்ட் வாய்ப்பைப் பெற்ற முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இந்த போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரை, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன (20) உறுதிசெய்திருந்தார். அந்தவகையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஞ்செலோ மெத்திவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், கடந்த காலங்களில் வேகப்பந்துவீச்சில் அசத்திவரும் துஷ்மந்த சமீரவும் அணியில் இடம்பெற்றனர்.

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், ஒசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம

இதேவேளை, மேற்கிந்திய தீவுகளை பொறுத்தவரை, அணித்தலைவராக கிரைக் பிராத்வைட் செயற்படவுள்ளதுடன், துடுப்பாட்ட வீரர் ஜேர்மி சொலென்ஷோ டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார்.

மே.தீவுகள் அணி – கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜேர்மைன் பிளக்வூட், குரூமா போனர், ரகீம் கொர்ன்வல், ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், ஜசூவா டி சில்வா, ஷெனொன் கேப்ரியல், ஜோமல் வரிகன், ரொஸ்டன் சேஸ், ஜெரமி சொலென்ஷோ

ரஞ்சன் மடுகல்ல சாதனை

இந்த போட்டிக்கான போட்டி நடுவராக ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் இணைந்து, 200 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்த முதல் நபர் என்ற பெருமையை மடுகல்ல நேற்று பெற்றுள்ளார்.

உலக கிரிக்கெட்டின் மூத்த நடுவர்களில் ஒருவராகக் கருதப்படும் மடுகல்ல, உலகில் 100 மற்றும் 150 டெஸ்ட் போட்டிகளை கடந்த முதல் நடுவர். மூன்று நிகழ்வுகளையும் அவரால் தனது தாயகத்தில் பதிவு செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்.