அருட்தந்தை சிறில் காமினி 3ஆவது நாளாக இன்றும் CIDயில் முன்னிலை

அருட்தந்தை சிறில் காமினி 3ஆவது நாளாக இன்றும் CIDயில் முன்னிலை-Reverend Father Cyril Gamini Fernando Arrives at the CID For the 3rd Day

- கடந்த செவ்வாய்க்கிழமை 9 மணி நேர வாக்குமூலம்
- கடந்த திங்கட்கிழமை 7 மணி நேர வாக்குமூலம்

வாக்குமூலம் அளிப்பதற்காக, அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் அறிந்த விடயங்களை தெரிவிப்பதற்காக வழங்கி வரும் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்றையதினம் (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கு அமைய, அவர் இன்றையதினம் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி முன்வைத்த பல்வேறு தகவல்கள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே CIDயில் பதிவு செய்த முறைப்பாடு தொடர்பில் அருட் தந்தையிடம் வாக்குமூலம் பெற அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அதனை அவர் ஆரம்பத்தில் நிராகரித்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றை உச்ச நீதிமன்றில் அருட் தந்தை சிறில் காமினி தாக்கல் செய்திருந்தார். இதன்போது அவர் தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக, CIDயினரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் மூலம் அருட் தந்தையை கைது செய்யவோ, அவரை துன்புறுத்தவோ, அவரை அசௌகரியங்களுக்குள்ளாக்கவோ முயற்சிக்கவில்லை எனவும் குறித்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான மிக முக்கிய சாட்சியம் என்பதுடன், அவை விசாரணையில் மிக முக்கியமானவை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கிலான செயற்பாட்டிற்காக, இது தொடர்பில் அருட் தந்தை தனக்குத் தெரிந்த அனைத்து முக்கிய தகவல்களையும், இன்றையதினம் (22) CIDயில் முன்னிலையாகி வழங்குவார் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

PDF File: