சவாலான குழுவில் இலங்கை

போட்டி அட்டவணையும் வெளியீடு

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை கடந்த (18) வெளியிடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இளையோர் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி முதல் பெப்ரவரி 5ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் முதல் முறையாக நடைபெறவுள்ள இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா உட்பட உலகின் 16 அணிகள் பங்கேற்கின்றன.

அடுத்த இளையோர் உலகக் கிண்ணத்தில் லீக் சுற்று, நொக் அவுட் சுற்று உட்பட 48 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவா எண்ட் பார்பியூடா, கயானா, செயின்ட் கிட்ஸ் எண்ட் நெவிஸ், டிரினிடேட் எண்ட் டொபேகோ ஆகிய 4 முக்கிய நகரங்களில் உள்ள 10 மைதானங்களில் நடைபெற உள்ளன.

நான்கு குழுக்களாக நடைபெறவுள்ள லீக் போட்டிகள் கயானா, செயின்ட் கிட்ஸ் எண்ட் நெவிஸ், டிரினிடேட் எண்ட் டொபேகோ ஆகிய நகரங்களில் ஜனவரி 14 முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் லீக் சுற்றில் விளையாடும். அதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜனவரி 14-ஆம் திகதி போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதே நாளில் ஸ்கொட்லாந்து அணியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த நடைபெறவுள்ள இளையோர் உலக்க கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டி சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பெப்ரவரி முதலாம் திகதியும், 2ஆவது அரையிறுதிப் போட்டி கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் பெப்ரவரி 2ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெறும் அணிகள் பெப்ரவரி 5ஆம் திகதி சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இளையோர் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் ஜனவரி 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 16 பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

குழு டி இல் இலங்கை அணி

மொத்தம் 16 அணிகள் பங்குபற்றவுள்ள இளையோர் உலகக் கிண்ணத்தில் குழு டி இல் இலங்கை அணி இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்தன.

நியூசிலாந்து அரசாங்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக இளையோர் உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் அந்நாட்டு வீரர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு இளையோர் உலகக் கிண்ணத்தில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணிக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணி குழு டி இல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இலங்கை தனது முதல் போட்டியை ஜனவரி 14ஆம் திகதி ஸ்கொட்லாந்து அணியுடன் விளையாடுகிறது. ஜனவரி 17ஆம் திகதி இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இலங்கை எதிர்கொள்கிறது.

ஐசிசியின் இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணத்தை அதிகபட்சமாக இந்தியா 4 தடவைகளும், அவுஸ்திரேலியா 3 தடவைகளும், பாகிஸ்தான் 2 தடவைகளும், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 இளையோர் உலகக் கிண்ணத்தின் குழுக்கள்

குழு ஏ: பங்களாதேஷ், இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம்.

குழு பி : இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, உகண்டா.

குழு சி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே.

குழு டி: மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, இலங்கை, ஸ்கொட்லாந்து.

இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் போட்டி அட்டவணை:

இலங்கை எதிர் ஸ்கொட்லாந்து – ஜனவரி 14, கயானா.

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – ஜனவரி 17, செயின்ட் கிட்ஸ் எண்ட் நெவிஸ்

இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஜனவரி 22, செயின்ட் கிட்ஸ் எண்ட் நெவிஸ்