தீ விபத்துக்கான காரணம் எரிவாயு கசிவே

தீ விபத்துக்கான காரணம் எரிவாயு கசிவே-Colombo Racecourse-McDonalds Blast-Reason Gas Leak

- இருவர் சிறுகாயம்; சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்
- எரிவாயு கசிவு; அதி குளிரூட்டி; அதி வெப்பமாக்கி இணைந்து வெடிப்பு

கொழும்பில் சர்வதேச உணவகமொன்றில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்துச் சம்பவத்திற்கான காரணம், அங்கு ஏற்பட்ட சமையல் எரிவாயு கசிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூட கட்டடத்தில் இயங்கி வரும் சர்வதேச உணவகமொன்றிலேயே (McDonalds) குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதுடன், தீ பரவலும் ஏற்பட்டிருந்தது.

கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ பரவல் காரணமாக, அப்பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நின்றிருந்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தற்போது தெரிவித்தார்.

குறித்த உணவகத்தின் சமையல் எரிவாயு குழாயில் ஏற்பாட்டு எரிவாயு கசிவுடன் அதி குளிரூட்டி மற்றும் உணவு தயாரிக்கும் அதே வெப்பமூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்பாடு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக, நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்

இதேவேளை, கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ், கறுவாத்தோட்டம் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாக  நிஹால் தல்தூவ தெரிவித்தார்.