- இது வரை எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை
- தீ கட்டுப்பாட்டுக்குள்
கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூடத்தில் உள்ள கட்டடமொன்றில் வெடிப்புச் சம்பவத்துடன், தீ பரவல் ஏற்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இன்று (20) அதிகாலை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, குறித்த கட்டடத்தின் கீழ் மாடியில் உள்ள சர்வதேச உணவு தயாரிக்கும் நிறுவனமொன்றின் ஹோட்டலிலேயே (McDonalds) இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வெடிப்புச் சம்பவத்திற்கு சமையல் எரிவாயுக் கசிவே காரணமென தற்போது வரை சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ காரணமாக இதுவரை எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ தொடர்பில் உறுதியான காரணத்தை கண்டறிய அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ், கறுவாத்தோட்டம் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.