2030 இற்கு முன் புகை வெளியேற்ற உக்கிரத்தை குறைத்து புதுப்பிக்கத்தக்க வளத்தில் அதிக கவனம்

புகை வெளியேற்ற (உமிழ்வு) தீவிரத்தைக் குறைப்பதையும் மின்சக்தி கொள்ளளவில்  புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும் 2030 இற்கு முன்பே நிறைவேற்ற இந்தியா  எதிர்பார்த்துள்ளது  மத்திய சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ஆர்.பி. குப்தா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் 2030 ஆண்டாகும் போது உமிழ்வு தீவிரத்தை 33 - 35 வீதத்தினால் குறைப்பது எமது இலக்கு. ஆனால் 2005 இன் பின்னர் இதன் மட்டம் - 45 சதவீதமாக அதிகரித்தது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின்சக்தி கொள்ளளவை 2030 ஆகும் போது 40 வீதத்திலிருந்து 50 வீதம் வரை அதிகரிப்பதும் இந்தியாவின் மற்றொரு இலக்காகும். அதேநேரம் 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உமிழ்வில் நிகர பூச்சியமாக்குதல், புதைபடிம அற்ற எரிபொருள் ஆற்றலை  2030க்குள் 500 ஜிகா வாட்டால் அதிகரித்தல் மற்றும் இப்பொழுது முதல் 2030 க்குள் குறைந்தது 1 பில்லியன் தொன் உமிழ்வை  தவிர்த்தல் ஆகியனவும் எமது இலக்குகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குறிப்பிட்டுள்ளது.   

அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

'நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு உறுதிமொழியையும் நிறைவேற்றுவதில் வேறு சில நாடுகளைப் போலல்லாமல்,  நாங்கள் உறுதியாக உள்ளோம். அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன. எமது பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியாவின் 2030 க்கான அனைத்து காலநிலை இலக்குகளையும் தமது உரையின் ஊடாக முன்வைத்துள்ளார். அவர் சுட்டிக்காட்டியபடி, அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை நிதி தொடர்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் இற்றைவரையும் நிறைவேற்றப்படாதுள்ளன. அத்தோடு இப்பொழுது முதல்  2030 வரையில்  1 ட்ரில்லியன் காலநிலை நிதியை அவர்  கோரியமையானது, எங்களது கடமைகளை நிறைவேற்ற வழிவகுப்பதற்காகும்.  ஆனால் வளர்ந்த நாடுகள் 2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அளித்துள்ள வாக்குறுதியை  இப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்க  வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'  என்றார்.

2015 பரிஸ் உடன்படிக்கையின் கீழ், ஒவ்வொரு நாடும் அதன் காலநிலை செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் என்றழைக்கப்படுவதோடு, காலநிலை மாற்றத்தைக் கையாள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விபரங்களை வழங்கக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தடவை நாடுகள்  தங்களது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புக்களை வலுவாகவும் அதிக இலக்குடனான  நடவடிக்கைகளுடனும்  புதுப்பித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தன் கடமைகளை நிறைவேற்றவென ஆர்வத்துடன் செயல்படுகின்றது என்றும் குப்தா கூறினார்.