வவுனியா வடக்கு பிரதேச சபை TNA பட்ஜட் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபை TNA பட்ஜட் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு-Vavuniya North Pradeshiya Sabha Budget Beaten

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (19) இடம்பெற்றது.

இதன்போது 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் வாசிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அநேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்களில் 7 பேர் வாக்களித்ததுடன் ஒருவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

அதற்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, சுயேட்சைக் குழு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 பேரே அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்ததுடன், ஜேவிபி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஆகிய மூவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான சபையின் வரவு - செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தது.

(ஓமந்தை விஷேட நிருபர்)