சீன சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் இந்தியா அவதானம்

திபெத் சுயாட்சிப் பிராந்தியம் மற்றும் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்திற்கு இடையில் உள்ள கிராமத்தில் சீனா சுமார் 100 வீடுகளை அமைப்பதாக பெண்டகன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

“கடந்த பல தசாப்தங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் உட்பட எல்லை பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கட்டுமான செயற்பாடுகளை சீனா மேற்கொண்டு வருவது பற்றி நாம் கூறியுள்ளோம். இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையோ அல்லது சீனாவின் நியாயமற்ற உரிமைகோரல்களையோ இந்தியா ஏற்காது.

இராஜதந்திர ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளை அரசு எதிர்த்து வருவதோடு எதிர்காலத்திலும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளும்” என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்ள சிறு கிராமங்களில் வாகனங்கள் செல்லக்கூடிய பாதைகள், பாலங்கள் உட்பட பாரிய உட்கட்டுமானங்களை சீனா அமைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு மேம்பாடுகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.