ஸ்டீவ் ஜொப்ஸ் கைகளால் உருவாக்கிய கணினி ஏலம்

45 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அசல் அப்பிள் கணினி 400,000 டொலர்களுக்கு ஏலம்போயுள்ளது.

அப்பிள்-1 என்ற அந்தக் கணினியை அப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களான ஸ்டீவ் ஜொப்ஸும் ஸ்டீவ் வோஸ்னியக்கும் கைகளால் உருவாக்கினர். ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்பத்தில் 200 ஆப்பிள் 1 கணினிகள் மட்டுமே இரு நிறுவனர்களால் உருவாக்கப்பட்டன.

இந்தக் கணினியில் வெளிப்புறம் கோவா (koa) மரத்தால் செய்யப்பட்டது. 50 ஆப்பிள்-1 கணினிகள் மட்டுமே அவ்வாறு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏலத்தில் விற்கப்பட்ட கணினிக்கு இதுவரை இரு உரிமையாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். கணினியை முதலில் வாங்கிய பேராசிரியர், 1977ஆம் ஆண்டு அதைத் தனது மாணவரிடம் விற்றார்.

அதை அப்போது 650 டொலருக்கு மட்டுமே அந்த மாணவர் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கணினி 600,000 டொலருக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலிபோர்னியாவில் நடந்த ஏலத்தில் 400,000 டொலருக்கு விலைபோயுள்ளது.