புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் பணிகள் இறுதிக்கட்டத்தில்

பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதோடு இந்த வருட இறுதிக்குள் அதன் அறிக்கை கையளிக்கப்பட இருப்பதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நேற்று (10)   பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணி குறித்தும் அநுர குமார திசாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக எமது கொள்கைப் பிரகடத்தில்  மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதற்காக எமக்கு வழங்கிய ஆணையை மதிக்கிறோம். அரசியலமைப்பு பல தடவை மாற்றப்பட்டுள்ளது. 1978 யாப்பிலுள்ள குறைபாடுகளை  கண்டறிந்து புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.    இந்தக் குழு இந்த வருட இறுதிக்குள் நகல் சட்டமொன்றை தயாரிக்கும் பணியை நிறைவு செய்ய உள்ளது. அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக நீதி அமைச்சு  எமக்கு அறிவித்துள்ளது.புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே இந்தக் குழுவின் பணியாகும்.இலங்கைக்குள் ஒருநாடு ஒருசட்டத்தை செயற்படுத்துவது  தொடர்பில் பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துகளை கவனத்திற் கொண்டு அது தொடர்பில் ஆராய்ந்து எமது நாட்டுக்கு உகந்த புதிய சட்ட கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான யோசனைகள்  மற்றும் கருத்துக்கள் முன்வைப்பதற்காக  ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்