தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்பட வேண்டும்

தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்பட வேண்டும்-Pivithuru Hela Urumaya Proposes 50% Representation from the National list for Women

- பிவித்துரு ஹெல உருமய யோசனை முன்மொழிவு

எதிர்வரும் தேர்தல்களின் போது தேசியப் பட்டியலில் 50% பெண்களுக்கு வழங்குவதுடன், வேட்பாளர் பட்டியலில் 25% பெண்களுக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிவித்துரு ஹெல உருமய கட்சி பரிந்துரைத்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவிலேயே அக்கட்சி இப்பரிந்துரையை முன்வைத்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று (08) கூடியபோதே பிவித்துரு ஹெல உருமய இந்தப் பரிந்துரையை முன்வைத்தது.

தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்பட வேண்டும்-Pivithuru Hela Urumaya Proposes 50% Representation from the National list for Women

பிவித்துரு ஹெல உருமய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், போஸ்டர் பிரசாரங்கள் தொடர்ந்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார். தேர்தல்களின் போது வேட்பாளர்கள் செலவுசெய்யும் பணத்தின் அளவுக்கான வரையறையொன்றை ஏற்படுத்தல், தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களுக்குள் செலவுகள் குறித்த விபரங்களைப் பகிரங்கப்படுத்தல் மற்றும் நன்கொடைகளுக்கான மூலங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியை நியமிப்பதற்கான தடவைகள், தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் செய்தல் போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், சோசலிச மக்கள் முன்னணி மற்றும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம்  ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் விசேட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்பட வேண்டும்-Pivithuru Hela Urumaya Proposes 50% Representation from the National list for Women

பிரதிநிதிகளின் தெரிவு 60 சதவிகிதம் தொகுதிவாரி முறையின்  கீழும், 40 சதவிகிதம் விகிதாசார முறையின் கீழும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியது. இதன்போது சிறிய கட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், தொகுதி வாரிமுறையின் கீழ் 60 சதவீதமும், விகிதாசார முறையின் கீழ் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம்  விசேட பாராளுமன்ற குழு முன்னிலையில் தெரிவித்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இக்குழு முன்னிலையில் தமது பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால.டி .சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம், குறித்த குழுவின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹண தீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.