யுகதனவி முதலீடு நாட்டுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிப்பு

யுகதனவி முதலீடு நாட்டுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிப்பு-Yugadanavi Power Plant is a Rare Opportunity-CEB Officers-PMD

- இலாபகரமான மின்சார உற்பத்தி முறைகளுக்குச் செல்லாவிட்டால் மின் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் எனவும் தெரிவிப்பு

“யுகதனவி” முதலீடு, இந்நாட்டுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும் என்பதால், அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக குறுகியகாலப் பிரச்சினைகளை மறந்து, நீண்டகாலப் பிரதிபலன்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று, மின்சாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

“யுகதனவி திட்டத்தின் உண்மைக் கதை” என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் இன்றைய தினம் (03) ஜனாதிபதி ஊடக மையத்தில் வீடியோ தொழில்நுட்பத்தினூடாக நடத்தப்பட்ட விசேட ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவ்வதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

நாட்டின் மின்சாரத் தேவையில் 95 சதவீதத்தையும் விட அதிகளவில் நிறைவு செய்துள்ளதால், மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு, குறைந்த செலவில் மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என்றும், அவ்வதிகாரிகள்  தெரிவித்தனர்.

புதிய எண்ணக்கருக்கள், புதிய தொழில்நுட்பங்களுடன் இடைநிலை சக்திவலு மூலங்களுக்குச் செல்லவேண்டியது கட்டாயமாகி உள்ளதால்,  குறைந்த செலவைக்கொண்டதும் சுற்றாடலுக்குப் பாதிப்பு இல்லாததுமான எல்.என்.ஜி மின்சார உற்பத்தி முறையிலான “யுகதனவி” மின்சார நிலையத்தை நிர்மாணிப்பதற்கு வேண்டிய தேவையானது, நாட்டு மக்களுக்கு நன்மைபயப்பதோடு, அரசாங்கத்துக்கு இலாபகரமான திட்டமாகவும் விளங்குகின்றது என, மின்சாரத்துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதன்போது உரையாற்றிய இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.ஃபெர்டிணான்டோ, “நாளாந்த மின்சாரத் தேவையின் வேகம்  அதிகரித்து வருகின்றது. ஒரு மின் அலகின் உற்பத்திச் செலவானது, 23 - 24 ரூபாய்களை விட அதிகரித்துள்ளது. அவ்வாறிருப்பினும், மின் அலகு ஒன்றை 16.65 ரூபாய்க்கே மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்றது” எனக் குறிப்பிட்டார்.

“நீண்டகாலமாகக் கலந்துரையாடப்பட்டு வந்த பல மின் உற்பத்தித் திட்டங்கள், பல்வேறு காரணங்களினால் நம் நாட்டுக்கு இல்லாமல் போயின. இதனால், நாட்டுக்கு அவசியமான மின்சாரத் தேவையத் தொடர்ந்து வழங்குவதாயின், மின் உற்பத்தியை அதிகரிப்பது கட்டாயமாகியுள்ளது” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இவ்வூடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கைத் தனியார் மின்சார நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி அதுல டி சில்வா, “யுகதனவி முதலீட்டுத் திட்டத்தை நிறைவு செய்வதன் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கைத்தொழிலாளர்களுக்கு, குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்” என்றார்.

“ஒரு வருடத்துக்கு, முழுமையானளவில் 40 ஆயிரம் மில்லியன் மின்சார அலகுகள் இந்நாட்டின் மின் பயன்பாட்டுக்கு அவசியம். அதனைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதால் மட்டுமே, மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்” என்று, மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

“யுதகனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை பற்றி, உரிய அதிகாரிகளுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துரையாடினார்களா?” என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மின்சார சபையின் பொது முகாமையாளர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு தொழிற்சங்கமும் கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பு கேட்கவில்லை என்றும் தான் உட்பட அதிகாரிகள் அனைவரும், இந்த “யுகதனவி” திட்டம் தொடர்பாகவும் அதன் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பிரதிபலன்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நாட்டில் மின்சார தடை ஏற்படுமா? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பொது முகாமையாளர், பொதுமக்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு சில குழுக்களால்  வெளியிடப்படும் கருத்துகள் பற்றி தாம் கவனத்திற்கொள்ளத் தேவையில்லை என்றும் மின் விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்க, பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின்சார சபையின் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேராவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.