இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து, தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகிய நீதிபதிகள் குழாம் இவ்வறிவிப்பை வழங்கியுள்ளனர்.
மனுவை பரிசீலித்த போது, மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 35ஆவது பிரிவின் கீழ் அவரது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி ரிட் உத்தரவை பிறப்பிக்க முடியாது எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் இந்த ரிட் மனுவை (Writ Petition) தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் மீது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளதால் அந்நியமனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை விடுக்குமாறு, மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தனர்.
அத்துடன் அவரைக் கைது செய்து விசாரணை நடாத்த பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிடக் கோரி குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இம்மனுக்களின் பிரதிவாதிகளாக சட்ட மாஅதிபர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் நாணயச் சபை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.