சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்கவும்

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.  அவ்வாறு செயற்படாவிடின் புதிய கொவிட் -19 அலை ஏற்படுமாயின் முழு சமூகத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நேற்று முதல் (01) எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கலந்துரையாடல்கள், மாநாடுகள் என்பவற்றை முடிந்த வரையில் இணையவழியூடாக ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மண்டபங்களில் ஏதேனும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டால் குறித்த மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினரை மாத்திரம் உள்ளடக்கி அவற்றை நடத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே திருமண வைபவங்களில் அதிகபட்சமாக 100 பேருக்கே அழைப்பு விடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மண்டபங்களில் நடத்தப்பட்டால் அங்கும் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். திறந்த வெளிகளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டால் 150 பேருக்கு அனுமதி வழங்க முடியும். புதிய வழிகாட்டல்களுக்கமைய அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திரையரங்குகள் , விளையாட்டு நிகழ்வுகள் , மரண சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, அதற்கேற்ப செயற்படுமாறு சகலரையும் கேட்டுக் கொள்கிறோம்.

அவ்வாறு சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் புதிய கொவிட் -19 அலை ஏற்படுமாயின் முழு சமூகத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.