- மதுபானசாலைகள், மச்சம், மாமிச விற்பனை நிலையங்களுக்கு பூட்டு
- வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
அதி வணக்கத்திற்குரிய வெலமிட்டியாவே ஸ்ரீ குசலதம்ம நாயக்க தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை முன்னிட்டு அன்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை (31) துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவரும், அக்கமஹா பண்டிதர் டொக்டர் அதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர் நேற்றையதினம் (28) காலமானார்.
இதனைத் தொடர்ந்து அன்னாரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் 2.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் குறித்த தினத்தை துக்க தினமாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மதுபானசாலைகள், மச்சம், மாமிச விற்பனை நிலையங்களுக்கு பூட்டு
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சிக் கடைகள், விலங்குகள் அறுக்கும் இடங்கள் ஆகியவற்றை மூடுவதற்கும் பணிக்கப்பட்டுள்ளது.
வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவரும், அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவுக்கு இன்று (29) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், விஹாரையில் கல்வி பயிலும் தேரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி, அந்த ஏற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இறுதிக் கிரியை ஏற்பாட்டுக்கு குழுத் தேரர்களுடன் கலந்துரையாடினார்.